

ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை வறண்டு வருவதால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்களும், விவசாயிகளும் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை உள்ளது. பாரூர் ஏரியிலிருந்து கிடைக்கும் தண்ணீர் மற்றும் மழை நீரை இந்த அணை நீராதாரமாகக் கொண்டுள்ளது. பாம்பாறு அணை, பாவக்கல், முன்றாம்பட்டி, கொண்டாம்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இந்த அணை குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அணையின் மொத்த உயரமான 22.5 அடியில் வறட்சியின் காரணமாக தற்போது 2 அடி அளவிற்கே தண்ணீர் உள்ளது. தற்போது நிலவும் கடும் வெயிலின் காரணமாக சில தினங்களில் இந்த தண்ணீரும் வறண்டு விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆழ்துளை கிணறு வறண்டு, குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விவசாயிகளும், மக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊத்தங்கரை பாம்பாறு அணை பாதுகாப்பு சங்கத் தலைவர் சவுந்திரராஜன் 'தி இந்து'விடம் கூறும் போது, ‘‘கடும் வறட்சியால் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
மழையை மட்டுமே நம்பி உள்ளோம். மழைக்காலங் களில் மதகுகள் பழுதால், தண்ணீர் வீணான சம்பவங்கள் நடந்துள்ளது. வறட்சி சூழ்நிலையைப் பயன்படுத்தி பெனுகொண்டாபுரம், பாம்பாறு அணைகளில் உள்ள 75 மதகுகளைச் சீர் செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணையின் உபரிநீரை பாம்பாறு அணைக்கு விட வேண்டும். இதன் மூலம் வறட்சியால் குடிநீர், விவசாயம் இல்லாமல் பரிதவிக்கும் ஊத்தங்கரை பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதே போல் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்,’’ என்றார்.