பொதுக்குழு முடிவை ஏற்கிறேன்: மு.க.அழகிரி பேட்டி

பொதுக்குழு முடிவை ஏற்கிறேன்: மு.க.அழகிரி பேட்டி

Published on

திமுக பொதுக்குழு எடுத்த முடிவை ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் தென்மண்டல அமைப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த 15-ம் தேதி நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் மு.க.அழகிரி பங்கேற்கவில்லை. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 21-ம் தேதி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடந்தன. அதிலும் அழகிரி கலந்துகொள்ளவில்லை. திமுக தலைமை மீது அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மதுரையில் இருந்து திங்கள்கிழமை விமானம் மூலம் சென்னை வந்தார் அழகிரி.

விமான நிலையத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

திமுக பொதுக்குழுவில் நீங்கள் கலந்து கொள்ளாதது ஏன்?

பொதுக்குழுவில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளா ததும் என்னுடைய சொந்த விருப்பம்.

பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக் கூட்டங்களில் பங்கேற்போர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறவில்லையே?

பொதுக்கூட்டத்தில் பேசும் தலைமைக் கழக பேச்சாளர்கள் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர்கள் பெயர்கள்தான் இடம் பெறும்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளாரே?

அது பொதுக்குழுவில் எடுத்த முடிவு. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை.

நீங்கள் கட்சியில் இருக்கிறீர்களா, இல்லையா?

நான் திமுகவில்தான் இருந்து வருகிறேன். கட்சிப் பணிகளை செய்து வருகிறேன்.

இவ்வாறு அழகிரி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in