

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் டி.ராஜா மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் ஈ.ஆர்.ஈஸ்வரன் புகார் தெரிவித்தள்ளனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் 33 ஆம் நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதற்கு அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமை வகித்து வருகிறார். வங்கிக்கடன் ரத்து, வறட்சிக்கானக் கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை அமைப்பது ஆகியவை அவர்களது கோரிக்கைகளாக இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) சேலை அணிந்த ஆண் விவசாயிகள் தாலிகளை அறுக்கும் போராட்டம் நடத்தினர். இவர்களை நேரில் வந்து ஆதரவளித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி.ராஜா உரையாற்றினார்.
பாராமுகமாக மத்திய அரசு
இதில், மாநிலங்களவை உறுப்பினரான டி.ராஜா பேசுகையில், ‘இந்த போராட்டத்தை ஆதரித்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்கள் பிரதிநிதிகளையும் டெல்லிக்கு அனுப்பி ஆதரவளித்து வருகின்றனர்.
கடும் வறட்சியின் காரணமாக தமிழகத்தில் குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. கடன்சுமையின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளை ஆதரித்து நான் அவர்கள் பிரச்சனைகளை மாநிலங்களவையிலும் கிளப்பியிருக்கிறேன்.
உபி தேர்தலில் பாஜக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தது. அதை மேற்கோள் காட்டப்பட்டு தமிழ்நாடு விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இதை நாடாளுமன்றத்தில் பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருகிறது. குடியரசு தலைவர் மற்றும் மத்திய விவசாயத்துறை அமைச்சரையும் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
ஆனாலும், மத்திய அரசு விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. தமிழக விவசாயிகளின் பிரச்சனையில் பிரதமர் பாராமுகமாக உள்ளார். இது குறித்து பேச நாளை சென்னையில் நடைபெறும் அனைத்துகட்சி கூட்டத்தில் எங்கள் கட்சி கலந்து கொள்ள முடிவு செய்துள்ளது.’ எனத் தெரிவித்தார்.
பிரதமருக்கு சவால்
முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் பேசுகையில், ‘தமிழக விவசாயிகள் தங்கள் குடும்பத்தினரை விட்டு கடந்த ஒரு மாதமாக டெல்லிக்கு வந்து போராடி வருகிறார்கள். இவர்களை தவிர்த்து விட்டு யாராலும் அரசியல் கட்சியை நடத்த முடியாது.
நாளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துகட்சி கூட்டத்திற்கு பிறகு விவசாயிகளுக்காக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இதில் அறிவிக்கப்பட உள்ள போராட்டத்திற்கு பிறகு பிரதமர் இந்த போராட்டக்காரர்களை சந்திக்கிறாரா? இல்லையா? பார்க்கலாம்.’ எனத் தெரிவித்தார்.
ராஜாவுடன் அவரது கட்சியின் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவரான குணசேகரன் மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர்.டி.துரைமாணிக்கம் ஆகியோரும் வந்திருந்து உரையாற்றினார்கள். ஈஸ்வரனுடன் அவரது கட்சியின் பொருளார் கே.கே.சி.பாலு, துணைப் பொதுச்செயலாளர் தங்கவேலு, இளைஞர் அணிச்செயலாளர் சூரிய மூர்த்தி உட்பட நிர்வாகிகள் வந்திருந்தனர்.