

மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் வராமல் தடுக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவிபச்சமுத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து, ரவிபச்சமுத்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பு, காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டு சாசனமாகும். கடந்த 21 ஆண்டுகளாக பல்வேறு தடைகளையும் தாண்டி, சட்ட போராட்டங்களில் சிக்கி மீண்டு வந்துள்ள இவ்வழக்கின் தீர்ப்பு, பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர் களுக்கான எச்சரிக்கை மணியாகும்.
கடந்த 2 வாரங்களாக தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையை நீக்கி, நிலையான அரசு அமைய ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரே கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவின் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவுகின்றது. இது தமிழகத்தின் வளர்ச்சியை முடமாக்கும் பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
இந்நிலையில், மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்கும் நிலை உருவானால், அது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும். ஏற்கெனவே கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு இது கூடுதல் சுமையாக மாறிவிடும்.
எனவே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், மக்கள் நலன் கருதி இந்த ஆட்சி தொடர்வதற்கு ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். அவ்வாறு அமையும் ஆட்சிக்கு இந்திய ஜனநாயக கட்சி, தன் தார்மீக ஆதரவினை வழங்கும்.
இவ்வாறு ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.