

அட்டைப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்து கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் 70-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் அட்டைப் பெட்டிகள், தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு ஆர்டரின் பேரில் அனுப்பப்படுகின்றன.
அட்டைப்பெட்டிகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களான கிராப்ட் பேப்பர் விலை கடந்த ஒரு மாதத்தில் 20 சதவீதம் உயர்ந்துள்ளதால், ஏற்கெனவே ஆர்டர் கொடுத்த நிறுவனங்களுக்கு அட்டைப்பெட்டிகளை வழங்க முடியாமலும், கூடுதல் தொகை பெற முடியாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
இதுகுறித்து ஓசூர் அட்டைப் பெட்டி உற்பத்தி செய்வோர் கூட்டமைப்பின் தலைவர் அறம் கிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகம், புதுச்சேரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இத்தொழில் மூலம் ஒரு லட்சம் பேரும், இதனைச் சார்ந்த தொழில்களை நம்பியுள்ள சிறு, குறுந்தொழில்களில் ஒரு லட்சம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர். இதில், ஓசூர் மையமாக கொண்ட அட்டைப் பெட்டிகள் உற்பத்தி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அட்டைப்பெட்டியின் மூலப் பொருளான கிராப்ட் பேப்பரை, 200-க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். திடீரென கிராப்ட் பேப்பர் விலையை தயாரிப்பு நிறுவனங்கள் 20 சதவீதம் உயர்த்தி யுள்ளன. அட்டைப் பெட்டி தயாரிப்புக்கு பயன்படக் கூடிய பேஸ்ட், தையல் ஒயர் உள்ளிட்ட வற்றின் விலையும் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இருப்பினும் அட்டைப் பெட்டிகளின் விலையை உயர்த்தாமல், மினரல் வாட்டர், கோழிக்குஞ்சு விற்பனை, ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு பழைய விலையிலேயே அளித்து வருகிறோம்.
மூலபொருட்கள் விலை உயர்வால் தொழில் நசிந்து வருகிறது. தற்போது அட்டைப் பெட்டி விலையை 20 சதவீதம் உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அட்டைப் பெட்டி விலை உயர்த்தினால், பேக்கிங் செய்யப்படும் பொருட்களின் விலையும் உயரும். கிராப்ட் பேப்பர் உள்ளிட்ட மூல பொருட்கள் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஓசூரில் உள்ள அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அட்டைப்பெட்டிகள்.