Published : 30 Mar 2014 10:32 AM
Last Updated : 30 Mar 2014 10:32 AM

பாமக.வில் இணைந்தார் காங். பிரமுகர் மணிரத்தினம்: சிதம்பரத்தில் சீட் பெற வழங்கிய ஒரு கோடி ரூபாய் வீண்?

சிதம்பரம் தொகுதிக்கு காங்கிரஸில் சீட் கிடைக்காததால் தொழிலதிபர் மணிரத்தினம் பாமக-வில் இணைந்தார். அவரை சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அறிவித்திருக்கிறது பாமக.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை தொலைநோக்கு திட்டமாக வைத்து, சிதம்பரம் தொகுதியில் மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்தவர் தொழிலதிபர் மணிரத்தினம். சிதம்பரம் இந்தமுறை இவருக்குத்தான் ஒதுக்கப்படும் என்று கட்சியில் பரவலாக பேச்சு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், முன்னாள் எம்.பி. வள்ளல்பெருமானை வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ் மேலிடம்.

வள்ளல்பெருமானை மாற்றக் கோரியும் அவருக்குப் பதிலாக மணிரத்தினத்தை வேட்பாளராக அறிவிக்கக் கோரியும் மணிரத்தினத்தின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்திக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் ஃபேக்ஸ்களும் பறந்தன. ஆனாலும், வேட்பாளர் மாற்றப்படவில்லை. இந்நிலையில், சனிக்கிழமை மணிரத்தினம் பாமக-வில் இணைந்தார். இதையடுத்து, சிதம்பரம் தொகுதிக்கு ஏற்கெனவே வேட்பாளராக அறிவித்திருந்த கோபாலகிருஷ்ணனை வாபஸ் பெற்ற பாமக, அவருக்குப் பதிலாக மணிரத்தினத்தை வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய மணிரத்தினத்தின் ஆதரவாளர்கள், ’’மணிரத் தினம் போட்டியிட்டால் திருமாவளவனுக்கு சிக்கலாகிப் போகும். இதை உணர்ந்த பாமக தரப்பு, சில வாரங்களுக்கு முன்பாகவே மணிரத்தினத்துக்கு தூதுவிட்டது. காடுவெட்டி குரு தரப்பிலிருந்து பேசியவர்கள், ‘மணிரத்தினத்தை பாமக-வுக்கு வரச் சொல்லுங்கள். அவரை சிதம்பரம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துகிறோம்’ என்று கூறினர். ஆனால், அப்போது காங்கிரஸை மலைபோல் நம்பிக் கொண்டிருந்த மணிரத்தினம் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கை சின்னம் ஒதுக்குவதற்கான கட்சியின் அத்தாட்சி கடிதமான ’பி ஃபார்ம்’ வழங்கப்பட்டது. சிதம்பரம் தொகுதிக்கு மட்டும் இந்தக் கடிதம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் நம்பிக்கை தளராமல் இருந்தார் மணிரத்தினம். ஆனால், வெள்ளிக்கிழமை இரவு பத்தரை மணிக்கு வள்ளல் பெருமானுக்கும் அத்தாட்சிக் கடிதம் கொடுத்துவிட்டனர். இதைத் தெரிந்து கொண்டுதான் சனிக்கிழமை மதியம் தைலாபுரம் தோட்டத்துக்கு புறப்பட்டார் மணிரத்தினம்’’ என்று கூறினர்.

காங்கிரஸின் இன்னொரு தரப்பிலோ, ‘’மணிரத்தினத்துக்கு சிதம்பரம் தொகுதியை பெற்றுத் தருவதாகச் சொல்லி, காங்கிரஸ் முக்கியப் பிரமுகர் ஒருவர் சுமார் ஒருகோடி ரூபாய் லாபம் அடைந்திருக்கிறார். அந்தப் பிரமுகருக்கு சென்னையில் 99 லட்ச ரூபாய்க்கு அடுக்குமாடி வீடு ஒன்று வாங்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த முக்கியப் பிரமுகருக்கும் ஜி.கே.வாசனுக்கும் அண்மைக்காலமாக ஒத்துப்போகவில்லை.

இந்நிலையில் அடுக்குமாடி வீடு விவகாரம் தொடர்பாக கடலூரில் உள்ள வாசனின் ஆதரவாளர்கள் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக்கிற்கு புகார்களை அனுப்பியுள்ளனர்.

முகுல் வாஸ்னிக் தரப்பிலிருந்து தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியதில், புகாரில் உண்மை இருப்பது உறுதியானது. புகாரில் உண்மை இல்லை என்று தெரியவந்தால் வள்ளல்பெருமானை விழுப்பு ரத்துக்கு மாற்றிவிட்டு, மணிரத் தினத்தை சிதம்பரத்தில் நிறுத்தும் திட்டத்தில் இருந்தனர். அதனாலேயே விழுப்புரம் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காமலும் இருந்தார்கள். இப்போது மணிரத்தினம் பாமக-வில் இணைந்து வேட்பாளராகிவிட்டதால் காங்கிரஸில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி தன்னை ஏமாற்றியவர்கள் குறித்த தகவல்களை அவர் எந்தநேரத்திலும் மீடியாக்களிடம் கொட்டித் தீர்க்கக்கூடும்’’ என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x