

ஈரோட்டில் கணிதமேதை ராமானுஜம் பிறந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்றுவது தொடர்பாக, மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி ஏழு மாதங்களாகியும், எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலை தொடர்கிறது. அடுத்த மாதம் 22-ம் தேதி அவரது பிறந்தநாள் வரும் நிலையில் குறைந்தபட்சம் அவர் பிறந்த வீடு உள்ள தெருவுக்காவது அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற கணிதமேதை ராமானுஜம், கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அவருடைய தந்தை சீனிவாசன், தாய் கோமளத்தம்மாள். ராமானுஜத்தின் தாய்வழிப்பாட்டனார், ஈரோடு நீதிமன்றத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றியதால், பிரசவத்துக்காக கோமளத்தம்மாள் ஈரோடு வந்திருந்தபோது, 1887-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி ராமானுஜம் பிறந்தார்.
நகர்மன்ற ஆவணம்
ஈரோடு அழகிய சிங்கர் வீதியில் உள்ள வீட்டில், ராமானுஜம் பிறந்ததற்கான குறிப்பு, அப்போதைய ஈரோடு நகர்மன்ற ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை பருவத்தில், சில ஆண்டுகள் வரை ஈரோட்டில் இருந்த ராமானுஜம், பள்ளிப்படிப்புக்காக கும்பகோணம் சென்றுவிட்டார். தனது 13-வது வயதில் புதிய தேற்றங்களை கண்டறியத் தொடங்கினார். கல்லூரியில் சேர்ந்தபோது, கணக்குப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்று பலரின் கவனத்தையும் கவர்ந்தார்.
ஈரோடு, அழகிய சிங்கர் தெருவில் உள்ள கணித மேதை ராமானுஜம் பிறந்த வீடு, அவரது குடும்பத்தினரிடம் இருந்து 2 பேருக்கு கைமாறிவிட்டது. 1950ம் ஆண்டுக்கு பின்னர், கல்வி நிறுவன உரிமையாளர் வசம் அந்த வீடு உள்ளது. உலகப் புகழ் பெற்ற கணிதமேதை ராமானுஜம் பிறந்த வீட்டை, கணித அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் தொடர் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
மாநகராட்சி தீர்மானம்
இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி நடந்த ஈரோடு மாநகராட்சிக் கூட்டத்தில், அருங்காட்சியகமாக மாற்ற மேயர் மல்லிகா பரமசிவம் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். அனைத்துத் தரப்பினரின் வரவேற்பைப் பெற்ற இந்த தீர்மானம், கடந்த ஏழு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஈரோடு வந்து கணிதமேதை ராமானுஜம் பிறந்த வீட்டை பார்வையிட்டுச் செல்லும் நிலையில், அவருக்குப் பெருமை சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேராசிரியர் மணி கூறியதாவது:
கடந்த, 2008-ம் ஆண்டு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோக்கியோ பல்கலைக்கழக கணிதத்துறை தலைவர் சுசுமு சக்குராய் ஈரோடு வந்து அவரது பிறந்த இடத்தைப் பார்வையிட்டார். இதுகுறித்து, அவர் நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.
முதல்வர் கவனிப்பாரா?
ராமானுஜம் பிறந்த இடத்தை அருங்காட்சியகமாக மாற்ற தொடர்முயற்சிகளை எடுத்தோம். மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய பின், தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவர் பிறந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டுமானால், தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். மாநகராட்சி சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதம்
22ம் தேதி அவரது பிறந்தநாள் வரும் நிலையில், குறைந்தபட்சம் அவர் பிறந்த வீடு உள்ள தெருவுக்கு ராமானுஜம் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழக பசுமை இயக்கத் தலைவர் ப.ஜீவானந்தம் கூறியதாவது:
ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு கல்வெட்டை, வ.உ.சி. பூங்காவில் வைக்க, 1987-ல் ஈரோடு நகர்மன்றத்தில் அனுமதி கேட்டோம்.
இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அந்த கல்வெட்டு அப்படியே கிடக்கிறது. அவர் பிறந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற மாநகராட்சி கொண்டுவந்த தீர்மானமும் கிடப்பில் போடப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.