விவசாயத்துக்கு இலவச மின்இணைப்பு கோரி ஆட்சியர் முன் தீக்குளிக்க பெண் முயற்சி

விவசாயத்துக்கு இலவச மின்இணைப்பு கோரி ஆட்சியர் முன் தீக்குளிக்க பெண் முயற்சி
Updated on
1 min read

விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பை மீண்டும் வழங்கக்கோரி நேற்று ஆட்சியர் முன் பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் மனு நீதிநாளில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ஆட்சியர் அலு வலகத்தில் நேற்று நடந்த மனு நீதிநாளில் ஏராளமானோர் ஆட்சியர் கொ. வீரராகவராவிடம் மனு அளித்தனர். பல்வேறு துறை அலுவலர்கள் அங்கு இருந்தனர். அப்போது, உசிலம்பட்டியை அடுத்த அம்பட்டையன்பட்டியைச் சேர்ந்த குபேந்திரன் மனைவி சாந்தி ஆட்சியரிடம் மனு அளித்தார். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த அலுவலர்கள், போலீஸார் சாந்தி மீது தண்ணீரை ஊற்றி, அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றனர். போலீஸாரிடம் சாந்தி கூறியது:

விவசாயம் செய்துவரும் எங்களுக்கு அரசு அளித்த இலவச மின் இணைப்பை 2012-ல் அதிகாரிகள் துண்டித்துவிட்டனர். விதிமீறல் நடந்துள்ளதாகக் கூறி இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். மீண்டும் மின் இணைப்பை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் வழங்கவில்லை. இதுகுறித்து ஆட்சியர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். சாந்தியை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். மனுநீதிநாள் அரங்கிலேயே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in