

தலைமைச் செயலக வளாகத்தில் வாகன நிறுத்தங்கள் முறைப்படுத்தப்படாததால், நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், அரசு அலுவலர்கள் நடந்து செல்வதற்கே சிரமம் ஏற்பட்டு வருகிறது.
புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை ஆகியவை அமைந்துள்ளன. இவை தவிர ராணுவ அலுவலகங்கள், ராணுவ கேன்டீன், அரசு அருங்காட்சியகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இதனால், தலைமைச் செயலக வளாகத்துக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால், வாகன நிறுத்த வசதி முறையாக இல்லாததால், பெரும்பாலான நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது.
தற்போது நாமக்கல் சட்டப்பேரவை கட்டிடத்தின் 4-ம் எண் வாயில் பகுதியில் பத்திரிகையாளர்கள் வாக னங்கள் நிறுத்துமிடம் உள்ளது. அங்கி ருந்து 6-ம் எண் வாயில் வரை இருபுற மும் தலைமைச் செயலர் மற்றும் துறை செயலர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. 6-ம் எண் வாயில் முதல் 7-ம் எண் வாயில் வரை, துறை அதிகாரிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. நாமக்கல் கவிஞர் மாளிகையின் பின்புறம் துறை செயலர்கள், அதிகாரிகளின் வாகனங்கள் வரிசையாக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, இருசக்கர வாகனங்கள், நாமக்கல் கவிஞர் மாளிகையின் முன்பறம் உள்ள சாலையில் இருபுறம் மற்றும் சட்டப்பேரவை கட்டிடத்தின் பின்புறம், 7 மற்றும் 8-வது வாயில் இடையே நிறுத்தப்படுகின்றன.
மேலும், தனியார் வாகனங்கள், அரசு அதிகாரிகளின் வாகனங்கள் புனித ஜார்ஜ் கோட்டை எதிரில் உள்ள காலியிடத்தில் நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு இடங்கள் இருந்தும், தலைமைச் செயலக வளாகத்தில் பெரும்பாலான நேரங்களில், வாகன நெருக்கடி ஏற்படுகிறது.
இதற்கு வாகன நிறுத்துமிடங்கள் முறைப்படுத்தப்படாததே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சட்டப் பேரவை கூட்டம் நடக்கும் நாட்கள் தவிர மற்ற நாட்களில், 4-ம் எண் வாயில் பகுதியில் பத்திரிகையாளர்களின் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப் படுகிறது. இதனால், பத்திரிகை யாளர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் முன்புறம் உள்ள சாலையில் வாகன நிறுத்தம் முறைப்படுத்தப்படாததால், அங்கு இருசக்கர வாகனங்கள், கார்கள் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்பட்டு, நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு இந்த சாலையில் உள்ள கடைகளும் ஒரு காரணம்.
வாகன நிறுத்தத்தை முறைப்படுத்த வேண்டும் என தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங் கள், பொதுத்துறையிடம் பலமுறை மனு அளித்துள்ளன.
இது தொடர்பாக சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘பொதுத்துறை சார்பில் வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விதிகளை யாரும் பின்பற்றுவதில்லை. வாகனங்களை போலீஸார் முறைப் படுத்த பொதுத்துறை உத்தரவிட வேணடும். தலைமைச் செயலக அதி காரிகள், ஊழியர்கள், பத்திரிகையா ளர்கள், இதர அலுவலகங்களுக்கான வாகனங்களுக்கு தனித்தனியான வாகன நிறுத்துமிடத்தை ஒதுக்கி, அவற்றை பராமரிக்க வேண்டும்’’ என்றார்.