நம்புதாளையில் நாட்டுப்படகு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நம்புதாளையில் நாட்டுப்படகு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மற்றும் பாம்பனை தொடர்ந்து மூன்றாவது கட்டமாக சனிக்கிழமை நம்புதாளையில் நாட்டுப்படகு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

தமிழக விசைப்படகு மீனவர்கள் வாருதல் (trawling) எனப்படும் இரட்டைமடி மற்றும் சுருக்குமடி போன்ற என்ற மீன்பிடிமுறைகளை கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த மீன்பிடி முறையினால் மீனவர்களுக்கு வேண்டிய மற்றும் வேண்டாத அனைத்து வகையான கடல் வாழ் உயிரினங்களும் வலைகளில் பிடிபடுகின்றன.

இதனால், கடலுக்கடியில் கடல்வாழ் உயிரினங்கயின் இனப் பெருக்கச் சூழல் மண்டலமே பாதிக்கப்படுகின்றது. பவளப்பாறைகள் சிதைக்கப்படுகின்றன.இதனால் கடல் வளம் அழிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் மீனவர்கள் இரட்டை மடி மற்றும் சுருக்குமடி முதலியவற்றை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.ஆனாலும், விசைப்படகு மீனவர்கள் பலர் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி வருவதாக தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் கூறிவருகின்றனர்.

விசைப்படகு மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் பிப்ரவரி 9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி, ஏழாவது நாளாக சனிக்கிழமையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த செவ்வாய்கிழமை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டமும், வியாழக்கிழமை பாம்பனில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது கட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை கடற்கரையில் சனிக்கிழமை மீனவப் பிரதிநிதி காளிதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இது குறித்து மீனவ சங்கப் பிரதிநிதி கருணாமூர்த்தி கூறியதாவது, "இதுவரை தமிழக-இலங்கை இரு நாட்டு மீனவர்களும் மூன்றுமுறை நடத்தி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கியமான ஷரத்தே இரு நாட்டு மீனவர்களும் தடை செய்யப்பட்ட வலையில் மீன்பிடிக்கக்கூடாது என்பதுதான். விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்ட வலையில் மீன்பிடிப்பதால்தான் பாக்சலசந்தி கடற்பரப்பு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்வளம் அழிந்து வருகிறது. இந்த வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தாமல் நிறுத்தினால் தான், இருநாட்டு மீனவர்களிடமும் சுமூக உறவு ஏற்படும். மேலும் கடல் வளமும் பாதுகாக்கப்படும்.

மேலும் பிப் 28 அன்று எங்களின் அடுத்தகட்டப் போராட்டமாக தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் உள்ளோம், என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in