

சசிகலாவை ஆதரிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவர்களது ஹாஸ்டலில்தான் உள்ளனர் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வி.எம்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் நிருபர் ஹாஸ்டலில் சென்று பார்த்த போது எம்.எல்.ஏ.க்கள் அறை பூட்டியே கிடந்தது தெரிய வந்துள்ளது.
சிவானந்தா சாலையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஹாஸ்டல் வளாகம் வெறிச்சோடிக் கிடந்தது. எம்.எல்.ஏ.க்களின் கார்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அறைகள் பூட்டியே கிடக்கின்றன.
மெய்க்காவலர்கள், பராமரிப்பு ஊழியர்கள் தவிர ஒருசிலரே ஹாஸ்டல் வளாகத்தில் உள்ளனர். ஹாஸ்டலின் பி-பிளாக்கில் அனைத்து அறைகளிலும் பூட்டுகளே தொங்கின. கேண்டீனில் கூட பராமரிப்பு ஊழியர்களே இருந்தனர்.
வழக்கறிஞர் கே.பாலு, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கான இவர்களது ஆதரவை முறியடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு இன்று (வியாழன்) விசாரணைக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வி.எம்.ராஜேந்திரன், “அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஹாஸ்டலில் சுதந்திரமாக பாதுகாப்பாக உள்ளனர்” என்றார்.
ஆனால் மனுதாரர்களோ, கிழக்குக் கடற்கரைச் சாலை ரிசார்ட் ஒன்றில் எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று புகார் எழுப்பினர்.
ஆனால் அமர்வு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், டி. மதிவாணன் ஆகியோர் மனுதாரர்களின் அடிப்படையைக் கேள்விக்குட்படுத்தி, ஆட்கொணர்வு மனுவை அவசரமாக பரிசீலிக்க இயலாது என்று கூறிவிட்டனர்.