

திமுக கூட்டணி தொடர்பாக ஒரு வாரத்துக்கும்மேல் செய்திகள் வெளிவந்த நிலையில், தேமுதிக திடீரென மறுப்பு வெளியிட்டதன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 28-ம் தேதி விஜயகாந்தை சந்தித்த பின்னர், ‘கூட்டணிக்கு அழைப்பு விடுத்தேன். பேச்சுவார்த்தை நல்லமுறையில் அமைந்தது’ என்றார். தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக தெரிவித்தார். மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும் கடந்த மாதம் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர். விஜயகாந்துடன் பேசி வருவதாக நேற்று முன்தினம்கூட மதுரையில் வைகோ கூறினார்.
இதற்கிடையே, திமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டது. தேமுதிகவுக்கு 59 தொகுதிகள் தர திமுக சம்மதித்துள்ளது என்று சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வந்தன. இப்படி 3 தரப்பில் இருந்தும் விஜயகாந்துடன் பேசி வருவதாக ஒரு வாரத்துக்கும் மேலாக தகவல்கள் வெளியான நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், ‘கூட்டணி பற்றி யாருடனும் பேசவில்லை’ என தேமுதிக தரப்பில் திடீரென அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் விஜயகாந்த் பெயரில் இல்லாமல் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் பெயரில் அறிக்கை வந்தது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 தொகுதி என்பதெல்லாம் வெறும் வதந்தி என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இப்படி, தேமுதிக திடீரென மறுப்பு அறிக்கை வெளியிட்டதன் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் உள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். இதுபற்றி தேமுதிக தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
திமுக கூட்டணியை நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புகின்றனர். ஆனால், பிரேமலதாவுக்கு அதில் விருப்பமில்லை. அவரது நடவடிக்கைகள் பாஜக கூட்டணியை விரும்புவது போலவே உள்ளன. தேமுதிக முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் காலை விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர்களிடம், ‘‘கட்சி தொடங்கிய ஓராண்டில் 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நின்றபோது 8.4 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2009 மக்களவைத் தேர்தலில் தனித்து நின்றபோது 10.3 சதவீதமாக வாக்கு வங்கி உயர்ந்தது. ஆனால், அதிமுக கூட்டணிக்கு சென்றபோது 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில்தான் வென்றோம். கடந்த மக்களவைத் தேர்தலில் 5.9 சதவீதமாக வாக்கு வங்கி குறைந்தது.
கூட்டணி அமைத்த பிறகு நாம் சரிவைத்தான் சந்தித்துள்ளோம். கூட்டணி மூலம் நாம் வளர வேண்டுமே தவிர, சரிவை நோக்கி செல்லக் கூடாது. கூட்டணி என்று அமைத்தால், அமைகிற அரசில் நாம் அங்கமாக இருக்க வேண்டும். அப்படியொரு சூழல் இப்போது ஏற்படவில்லை. தேர்தலுக்கு 2 மாதத்துக்கும்மேல் அவகாசம் உள்ளது. எனவே, சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுப்பேன்’ என்று கூறினார்.
இதன்மூலம் தேமுதிகவின் கோரிக்கைகள் திமுக தரப்பில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இதன் பின்னணியில்தான், திமுக - தேமுதிக கூட்டணி குறித்த செய்திகளுக்கு நேற்று முன்தினம் மறுப்பு வெளியிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.