

2010ம் ஆண்டு துவக்கத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் உத்தரவுப்படி சுற்றுச்சூழலை மிக அதிகமாக மாசுபடுத்தும் தொழில் நகரங்களை பட்டியலிட்டது. அந்தப் பட்டியலில் 43 நகரங்கள் இருந்தன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த கோவை, மணலி, கடலூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களும் அடங்கும். இப்பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வரை தொழில் சார்ந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.
இதில் கோவைக்கு விதிக்கப்பட்ட தடை 2010ம் ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது. கடலூர் பகுதியில் 2011ம் ஆண்டும், மணலி பகுதிக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் தடை நீக்கப்பட்டுள்ளது. வேலூருக்கு மட்டும் இன்னும் தடை தொடர்கிறது.
மணலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. நிலக்கரியில் இருந்து 'மெர்குரி' என்றழைக்கப்படும் பாதரசம் எனும் வேதிப்பொருள் வெளிப்படுகிறது. இது மனிதர்களுக்கு இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு 2010ம் ஆண்டு ஐ.நா. அமைப்பு ‘2020ம் ஆண்டில் பாதரசத்தின் பயன்பாட்டை நீக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தி 'மினமாட்டா ஒப்பந்தம்' கொண்டு வந்தது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 140 நாடுகள் பாதரசத்தை ஒழிக்க கொள்கை அளவில் ஒப்புக் கொண்டன. இந்த ஒப்பந்தம் தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் ஜப்பானில் மாநாடு நடைபெற்றது. அதில் சில நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் இந்தியா கையெழுத்திடவில்லை.
ஆய்வாளர்கள் கருத்து
இதுபற்றி சுற்றுச்சூழல் ஆய்வாளரான ராஜேஷ் ரங்கராஜன் 'தி இந்து'விடம் கூறியதாவது:
நிலக்கரி, பாதரசம் போன்றவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்போது நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையுமோ என்ற அச்சத்தால்தான் இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திடவில்லை.
ஓசோன் படலத்தைப் பாதுகாக்க 'மான்ட்ரியல் ஒப்பந்தம்' உள்ளது. அதில் ஓசோன் படலத்தைப் பாதிக்கும் பொருட்களை வளரும் நாடுகள் குறைப்பதற்காகவும் அதற்கு உதவவும் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. இதுபோன்ற நிதி 'மினமாட்டா ஒப்பந்தத்தில்' இல்லாததும் அரசு கையெழுத்திடாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 50 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் உலகம் முழுவதும் அது சட்டமாக மாறும். இந்தியா மிக விரைவில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றார்.