

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையில் 18 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 துணை ஆணையர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறநிலையத் துறை செயலர் ராஜாராமன் வெளியிட்டுள்ள உத்தரவு: மதுரை துணை ஆணையராக இருந்த ஆர்.பொன்சுவாமிநாதன், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் இணை ஆணையராகவும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் துணை ஆணையராக இருந்த சி.நித்யா, திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் துணை ஆணையராக இருந்த மொ.அன்னக்கொடி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று, ஏற்கெனவே இணை ஆணையர்களாகப் பணியாற்றி வரும் அதிகாரிகள் பலரும் பல்வேறு மாவட்டங்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் இணை ஆணையர் பா.விஜயா சென்னை மண்டலம்-1 இணை ஆணையராகவும், திருவண்ணாமலை இணை ஆணையர் அ.இரா. பிரகாஷ், ரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் இணை ஆணையராகவும், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் என்.சுரேஷ், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ரங்கம் கோயில் இணை ஆணையர் எஸ்.சிவராம்குமார், தஞ்சாவூர் இணை ஆணையராகவும், மதுரை இணை ஆணையர் சி.மாரியப்பன், ராமேசுவரம் கோயில் இணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர். சேலம், நெல்லை, திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மண்டலம்-3, உட்பட மொத்தம் 18 இணை ஆணையர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.