

திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
சென்னை: 'தமிழகத்தில் காலியாகவுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும்' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம், கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், முதற்கட்டமாக தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இரண்டிலும் தவெக வெற்றி பெற்றது.
எஞ்சியுள்ள 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதில் நீதிமன்ற வழக்குகள் காரணமாக சட்ட சிக்கல்கள் எழுந்தன. இந்த விவகாரத்தை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு தற்காலிக தடை விதித்தது. இதனால், தேர்தல் ஆணையத்தால் உடனடியாக இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இடைத்தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்பதால், 5 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைத் தொடங்குமாறு திமுக நிர்வாகிகளுக்கு, மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளையும் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தொகுதிகளின் அரசியல்சூழல், கட்சியின் அமைப்பு ரீதியான தயார் நிலை, தேர்தல் பணிகளைத் திட்டமிடுதல், வேட்பாளர்தேர்வு உள்ளிட்ட அம்சங்கள்குறித்து ஆலோசிக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது.
நிர்வாகிகளிடம் ஸ்டாலின் பேசும்போது, “5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம். எனவே, அதற்கான பணிகளை இப்போதே தொடங்கவேண்டும். தொகுதிகளில் மக்களிடம் நன்கு அறிமுகமானவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை கட்சித் தலைமைக்கு அனுப்ப வேண்டும். வேட்பாளர்களை கட்சி தலைமை முடிவு செய்யும். கடந்த இடைத்தேர்தலில் நூலிழையில்தான் வெற்றியைத் தவறவிட்டுள்ளோம். எனவே, இந்த முறை வெற்றி பெற்றே ஆகவேண்டும்.
தமிழகத்தில் தினமும் கொலை, குற்றச் சம்பவங்கள் நிகழ்கின்றன. விலைவாசியும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்களைச் சரியான முறையில் அணுகி, திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகளைப் பெற வேண்டும்” என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.