புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
Updated on
1 min read

புதுச்சேரியில் பணி நீக்கப்பட்ட பொதுப்பணித் துறை தினக்கூலி ஊழியர்கள் 1,311 பேருக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் நாளை மறுநாள் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், புதுவை பொதுப்பணித் துறையில் பணி நீக்கப்பட்ட 1311 பேருக்கு வருகிற 3–ஆம் தேதி மீண்டும் பணி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.137 சம்பளமாக வழங்கப்படும் என்றார்.

மேலும், பொதுப்பணித் துறையில் பணி புரிந்து இறந்த ஊழியர்களின் வாரிசுகள் 137 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்றார்.

இதேபோல், கால்நடை மருத்துவ கல்லூரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 109 பேரும் 3–ஆம் தேதி மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

காரைக்காலில் 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படவுள்ள சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு திங்கள் கிழமை (3-ஆம் தேதி) அடிக்கல் நாட்டப்பட இருப்பதாகவும் கூறினார்.

முதல்வருக்கு நன்றி: பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு திங்கள் கிழமை (3-ஆம் தேதி) முதல் மீண்டும் பணி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருப்பது தங்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக உள்ளதாகவும், இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மீண்டும் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் ஒருவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in