

சென்னையில் கொட்டிய கச்சா எண்ணெய் படலம் நேற்று முதல் புதுச்சேரி கிராம கடற்கரைப் பகுதிகளில் காணப்பட்டது. காற்றின் போக்கினால் இப்படலம் புதுச்சேரி அருகே பரவியதாக தெரிவிக்கின்றனர்.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே 2 கப்பல்கள் மோதிக்கொண்டதில், அதில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்நிலையில், புதுச்சேரி பகுதியிலும் நேற்று எண்ணெய் படலம் திட்டு திட்டாகக் காணப்பட்டது. கரையிலும் இந்த எண்ணெய் படலத்தை காண முடிந்தது. வீராம்பட்டினம், நரம்பை, மூர்த்தி புது குப்பம் உள்ளிட்ட பல கடற்கரை பகுதிகளில் இத்திட்டு காணப்பட்டது.
மீனவர்கள் தரப்பில் கூறும்போது, “கடலில் நீரின் மேற்பரப்பில் திட்டு திட்டாக எண்ணெய் படலம் மிதந்தது. சில இடங்களில் எண்ணெய் படலங்கள் கட்டியாக கரையில் ஒதுங்கி கிடக்கிறது. இந்த எண்ணெய் படலத் திட்டால் கடல்வாழ் உயிரினங்கள் ஏதும் இங்கு இறக்கவில்லை. சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடம் அரசு அறிவுறுத்தி இதற்கு தீர்வு காண்பது அவசியம்” என்றனர்.
தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோவிடம் கேட்டபோது, “தற்போது கடல் காற்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசும். காற்றின் போக்கினால் எண்ணெய் படலம் இங்கு மிதந்து வருகிறது. சிறிதளவே எண்ணெய் திட்டுகள் இருப்பதால் பாதிப்பு இல்லை. புதுச்சேரி அரசின் கவனத்துக்கும் இவ்விஷயத்தை கொண்டுசெல்வோம். மீன் இறைச்சி சாப்பிடுவதால் பாதிப்பு ஏற்படாது. மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை” என்றார்.