

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் நேரம் நண்பகல் 12 மணியாக நீட்டிக்கப்பட்டாலும், பார் உரிமையாளர்கள் காலை 7 மணிக்கே மது விற்பனையை தொடங்கி விடுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பார்களின் மூலம் போலி மதுவகைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 800 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தேசியளவில் மதுவுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வுகள் வெளியாகின. இதன் காரணமாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குரல் எழுப்பினர். மது ஒழிப்பு ஆர்வலர் சசிபெருமாள் மதுவுக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பூரண மதுவிலக்கு என்னும் அம்சத்தை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கை யில் இடம்பெறச் செய்தன. படிப் படியாக மதுவிலக்கு அமல் படுத்தப்படும் என்று அறிவித்த அதிமுக, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முதற்கட்ட மாக மதுக்கடைகளை திறக்கும் நேரத்தை காலை காலை 10 மணியிலிருந்து நண்பகல் 12 மணியாக்கியது. மேலும் 500 கடைகளையும் மூடியது.
டாஸ்மாக் மதுக்கடைகள் 12 மணிக்கு திறக்கப்பட்டாலும், அவற்றை ஒட்டி இயங்கும் பார்கள் காலை 7 மணிக்கெல்லாம் திறக்கப்படுவதாகவும், அவற்றில் போலி மது வகைகள் விற்கப் படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் பாலமுருகன் என்பவர் கூறும்போது, “நான் வடபழனி அருகே பணி செய்து வருகிறேன். சிஐடி நகர் வழியாகத்தான் நான் பணிக்குச் செல்கிறேன். ஒருமுறை அந்த வழியாக சென்றபோது, சிஐடி நகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் காலை 7 மணிக்கே கூட்டம் இருந்தது. என்னவென்று பார்த்தபோது அதன் அருகில் இருந்த பாரில் மது விற்பனை நடந்தது. மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதாக கூறிவிட்டு இப்படி கள்ளத்தனமாக விற்பனை செய்வது, குடிகாரர்களை மேலும், குடிகாரர்கள் ஆக்கும்” என்றார்.
இதுபற்றி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் தலைவர் நா.பெரியசாமி கூறியதாவது:
விற்பனை நேரத்தை குறைத்ததால் மது விற்பனை 2% முதல் 5% வரை குறைந்தது. இந்தச் சூழலில் பார்களின் மூலம் மது விற்பனை நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை மிரட்டி பார் உரிமையாளர்கள் மது வகைகளை பெற்றுக் கொள்கின்றனர். அந்த மது கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மது மட்டுமன்றி, போலி மது வகைகளும் பார்கள் மூலம் விற்கப்படுகின்றன. இந்த நிலை நீடித்தால், மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், சமீபத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள தெருக்களிலேயே தற்போது போலி மது வகைகள் விற்கப்படுகின்றன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் அங்கீகாரம் இல்லாத பார்கள்தான் காரணம். அங்கீகாரமில்லாத பார்களே இல்லை என்று அரசு தரப்பில் கூறினாலும், அப்படியான பார்கள் இயங்கிக் கொண்டுதான் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.