மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டு கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்: திமுக புகாருக்கு ஜெயலலிதா பதில்

மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டு கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்: திமுக புகாருக்கு ஜெயலலிதா பதில்
Updated on
1 min read

கச்சத்தீவு விவகாரத்தில் மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட வகையில் எல்லா நடவடிக்கைகளை யும் எடுத்து வருகிறேன். எதிர்க்கட்சிகள் எவ்வளவு கூச்சல் போட்டாலும் உண்மைகளை மறைக்க முடியாது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பொன்முடி (திமுக), ‘‘கடந்த 1991-ல் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற நிலை யில், கோட்டையில் கொடியேற்றி விட்டு, ‘கச்சத்தீவை மீட்பேன்’ என்று அறிவித்தாரே?’ என கூறினார்.

அப்போது முதல்வர் ஜெய லலிதா குறுக்கிட்டு பேசியதாவது:

திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அப்போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? மாநில அரசின் அதிகார வரம்பை உணர்ந்து நான் பேசினேன். மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுப்பேன் என்றேனே தவிர, ஒரு படையை திரட்டிக்கொண்டு, கச்சத்தீவை மீட்பேன் என பைத்தியக்காரத்தனமாக பேச வில்லை.

கடந்த 2008-ம் ஆண்டு மத்திய அரசை அணுகி எந்த பயனும் இல்லை என்று தெரிந்த பிறகு, தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தேன். எதிர்க்கட்சிகள் எவ்வளவு தான் கூச்சல் போட்டாலும், உண்மைகளை மறைக்க முடியாது. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு கருணாநிதிதான் காரணம். இன்று மீனவர்கள் படும் அல்லல்களுக்கு காரணம் திமுகதான்.

உண்மையாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு இருந்திருந்தால், 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, தமிழக அரசும் இந்த வழக்கில் தன்னை சேர்த்திருக்கலாம் அல்லவா? அதன்பின் 2011-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி, வருவாய்த்துறை மூலம் தமிழக அரசை இந்த வழக்கில் நான் இணைத்துள்ளேன். அந்த காரியத்தை திமுக ஆட்சியில் ஏன் செய்யவில்லை?

நான் முதல்வரான 1991 முதல் இன்று வரை என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கச்சத்தீவை மீட்க என்னால் முடிந்த நடவடிக்கைகளை மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட வகையில் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரே ஒரு ஆண்டுதான் மத்திய கூட்டணி அரசில் அதிமுக அங்கம் வகித்தது. அந்த நேரத்தில் தமிழகத்தின் எந்த கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்காததால் கூட்டணியில் இருந்து விலகினோம்.

என்ன அருகதை?

ஆனால், மத்தியில் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சிகளில் திமுக அங்கம் வகித்தது. அப்போது ஏன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கச்சத்தீவை மீட்க கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இத்தனை ஆண்டுகள் தூங்கிவிட்டு, இப்போது திடீரென விழித்துக்கொண்டு, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என என்னைப் பார்த்து கேட்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in