

திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரு கிறது. இரண்டு மாதங்களாக காய்ச்சல் பரவுவதை தடுக்க பழநி நகராட்சி, சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் முழுமையான பலனை அளிக்கவில்லை.
பழநி நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலவும் சுகாதாரமின்மையே காய்ச்சல் பரவ முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. நகராட்சி பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால், தண்ணீரை பிடித்து நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கின்றனர்.
அந்த தண்ணீரில் கொசுப்புழுக்கள் உருவாகி காய்ச்சலை பரப்புகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பழநி பெரியப்பா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக, கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது மருத்துவப் ப ரிசோதனையில் உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு பழநி அருகே அழகாபுரியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி அனிதா காய்ச்சல் பாதிப்பால் பலியானார். அவரது இறப்புக்கு காரணம், டெங்கு காய்ச்சல் என்றும், மூளைக் காய்ச்சல் என்றும் இருவேறு கருத்துகளை மருத்துவர்கள் கூறினர்.
இதுபோன்று காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, உண்மை நிலவரத்தை அரசு மருத்துவர்கள் தெரிவிக்க மறுப்பதால், சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலும் அச்சப்பட வேண்டிய நிலைக்கு பழநி பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காய்ச்சலால் பாதிக் கப்பட்டிருந்த பழநி அப்பர் தெருவை சேர்ந்த பிருந்தா(22), நேற்று காலையில் உயிரிழந்தார். இந்த முறையும் அதற்கான காரணத்தை மருத்துவர்கள் தெளிவாக தெரிவிக்கவில்லை. பிருந்தாவுக்கு ஏற்கெனவே சில உடல் பிரச்சினைகள் இருந்தன. அதோடு காய்ச்சலும் சேர்ந்துகொண்டதால் உயிரிழந்துவிட்டார் என காரணம் கூறியுள்ளனர்.
காய்ச்சல் பரவி வரும் நிலையில், பழநியில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொள்ள வேண் டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து பழநி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி விஜயசேகர் கூறியதாவது: கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்ட பிருந்தாவை பரிசோதித்ததில் அவருக்கு தைராய்டு பிரச்சினை, மூட்டு வீக்கம், இத்துடன் காய்ச்சலும் இருந்தது கண்டறியப்பட்டது. ஏப்ரல் 6-ம் தேதி அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தோம். பல்வேறு நோய்கள் பாதிப்பால் அவர் இறந்துவிட்டார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. விரைவில் காய்ச்சல் பாதிப்பு முற்றிலும் குறையும் என்றார்.