

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கமானது அல்ல. இதற்கு அதிமுகவின் பிளவு முக்கியக் காரணம். ஆளுங்கட்சியே உட்பூசலில் சிக்கியிருக்கும்போது நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால் எல்லாக் கட்சிகளும் அறுவடைக்கு தயாராக காத்திருக்கின்றன.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கும் ஆர்.லோகநாதன் 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்காக பேட்டியளித்துள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
மக்கள் ஆதரவு வெகுவாக இருக்கிறது. ஆர்.கே.நகரில் களமிறக்கப்பட்டுள்ள பிற கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருமே பிரபலமானவர்கள். ஆனால், நான் இந்த மக்களில் ஒருவன். ஆர்.கே.நகரில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களே அதிகம். அத்தகைய மக்களின் நிலையை உணர்ந்து அவர்களுக்கு நன்மை செய்ய அவர்களில் ஒருவராக இருப்பவராலேயே முடியும். அதனால், ஆர்.கே.நகர் பிரச்சாரக் களம் எனக்கு சாதகமாக இருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்று என்ற அடையாளத்துடன் ஒன்றிணைந்த மக்கள் நலக் கூட்டியக்கம் இன்று பிரிந்து கிடக்கிறதே..
மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற கொள்கையை வகுத்ததே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். எங்கள் கொள்கையில் நாங்கள் இன்னமும் உறுதியுடன் இருக்கிறோம். மாற்று அரசியல் என்பது ஒரு நீண்ட பாதை. அந்தப் பாதையில் நாங்கள் சரியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். மற்றபடி இதற்கு இடையூறாக வரும் சிறுசிறு சலசலப்புகளால் மாற்று அரசியலை முன்னெடுக்கும் கொள்கைக்கு எவ்வித பாதிப்பும் வராது.
தேர்தலுக்கு அப்பால் மக்கள் நலக் கூட்டியக்கம் இணைந்து செயல்படும் என்ற திருமாவளவனின் நிலைப்பாடு குறித்து..
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இந்த நிலைப்பாட்டால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மார்க்சிஸ்ட் கட்சியை அடையாளப்படுத்துவது அதன் கொள்கைகள் மட்டுமே. மக்கள் நலக் கூட்டியக்கம் தொடர்ந்து மாற்று அரசியலை மக்களிடம் எடுத்துச் செல்லும்.
இடைத்தேர்தலில் பணபலம் வெல்லுமா?
மக்கள் முன்புபோல் இல்லை. அவர்கள் அரசியலை உற்று கவனிக்கிறார்கள். மாற்று அரசியலின் தேவையை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆளும், ஆண்ட கட்சிகளின் நோக்கம் என்னவென்பது அவர்களுக்கு புரிந்திருக்கிறது. வாக்களிக்க எல்லோரும் பணம் வாங்குவதில்லை. அதனால், தேர்தலில் பணபலம் என்று சொல்லி மக்களை குற்றவாளியாக்கக் கூடாது.
ஆர்.கே.நகரின் தலையாயப் பிரச்சினை என்று எதைக் கூறுவீர்கள்?
ஆர்.கே.நகரில் அடிப்படை வசதி ஆரம்பித்து பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. 4 பிரச்சினைகளை மிக அவசரமாக தீர்க்கப்பட வேண்டியப் பிரச்சினைகள் என நான் பட்டியலிடுவேன்.
முதலாவது பிரச்சினை, மீனவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். ஆர்.கே.நகரில் புலம்பெயர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆந்திராவிலிருந்து வந்த மீனவர்கள் அதிகம். தமிழக அரசு அறிவிக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் இவர்களுக்கு கிடைப்பதில்லை. மீனவர்களுக்கு குடியிருப்பு கட்டித்தர வேண்டும். தற்போது அவர்கள் சுகாதாரமற்ற குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆர்.கே.நகர் துறைமுகத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இதுவரை இப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த எந்த கட்சியும் துறைமுகத்தை கண்டுகொள்ளவில்லை.
இங்குள்ள 80% வீடுகள் குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டவை. அப்போது, இந்த வீடுகளைப் பெற்ற பயனாளர்கள் பலரும் இங்கில்லை. எனவே, தற்சமயம் இந்த வீடுகளில் இருப்பவர்களின் பெயரிலேயே இந்த வீடுகளை ஒதுக்க வேண்டும்.
ஆர்.கே.நகரின் மற்றொரு பிரச்சினை போக்குவரத்து நெரிசல். ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்து 5 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கொருக்குபேட்டை, எழில்நகர் மக்கள் போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொடுங்கையூர் குப்பை மேடு பிரச்சினை தமிழகமே அறிந்தது. இதனால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டால் இப்பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனைகள் மாலை நேரங்களிலும் இயங்க வேண்டும். இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தினக்கூலிகள். பகல் நேரத்தில் வேலைக்குச் செல்லும் அவர்கள் மாலையில்தான் மருத்துவம் பார்க்க வருகிறார்கள். மாலையில் அரசு மருத்துவமனைகள் இயங்காததால் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது.
இத்தகைய அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் கட்டமைப்புப் பிரச்சினைகளையும் தீர்க்காமல் இந்த பகுதிக்கு என்ன செய்தாலுமே அது எடுபடாது.
தேர்தலில் போட்டியுமில்லை; யாருக்கும் ஆதரவுமில்லை என்ற வைகோவின் நிலைப்பாடு..
வைகோ ஜனநாயகக் கடமையைச் செய்யத் தவறுகிறார் என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.
பாஜக புறவாசல் வழியாக நுழையப்பார்க்கிறது என்று மார்க்சிஸ்ட் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகிறதே..
மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் திணிக்க வேண்டுமென்பதே பாஜகவின் எண்ணம். இதற்கு, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணிகளாக பிரிந்துகிடக்கும் அதிமுகவை அதற்குப் பயன்படுத்திக் கொள்கிறது பாஜக. பாஜகவின் இந்தச் செயலை வேறு எப்படி அழைக்க முடியும்?
பாஜக வேட்பாளர் கங்கை அமரன் தி இந்து தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தனது சகோதரர் பாவலர் வரதராசனை குறிப்பிட்டு 'கம்யூனிஸ்ட் கட்சிக்கு உழைப்பவர்களை மேலே தூக்கிவிடத் தெரியாது' என குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதில் உங்கள் கருத்து?
அவரது கருத்து பொய் என்பதை நிரூபிக்கும் சாட்சி நான்தான். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த என்னை இக்கட்சி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. கட்சிக்காக உழைத்ததற்கான வெகுமானம் இது.
மக்களுக்காகவே போராடிய இரோம் ஷர்மிளா தேர்தலில் தோற்றுப் போனது ஏன்?
மக்கள் நம்மை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நமது போராட்டத்துக்கு பலனில்லை. லட்சியம் எதுவாக இருந்தாலும் யாருக்காக போராடுகிறோம், யாரைத் திரட்டிப் போராடுகிறோம் என்பதே முக்கியம்.