

ராமருக்கு குகன், சுக்ரீவன் உடன்பிறவா சகோதரர்களாக இருந்தது போல ஸ்டாலினுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தது குறித்து வி.பி.கலைராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏவாகவும் அமமுக நிர்வாகியாகவும் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இதுகுறித்து அமமுகவில் இருந்து திமுகவுக்குச் சென்ற முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கலைராஜன் பேசினார். தனியார் தொலைக்காட்சியிடம் அவர் கூறும்போது, ''தங்க தமிழ்ச்செல்வனின் வளர்ச்சி நல்லவிதமாக இருக்கும்.
தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்க தமிழ்ச்செல்வனை எதிரியாக நினைக்க முடியாது. யார் வேண்டுமானாலும் தேர்தலில் யாரை வேண்டுமானாலும் எதிர்த்துப் போட்டியிடலாம். அடுத்த தேர்தலுக்காகத் தயாராகும் பணியில் இருக்கிறோம். அதில் முன்னணி வகிப்பதற்காக தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார்.
ஸ்டாலினின் ஆற்றலைப் பார்த்துத்தான் நான் திமுகவில் இணைந்தேன். தங்க தமிழ்ச்செல்வனையும் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நிர்வாகிகள் அனைவரும் நிச்சயமாக இணைந்து செயலாற்றுவர். கருணாநிதி சொன்ன உடன்பிறப்புகள் என்ற வார்த்தைக்குள் நானும் அடங்கியிருக்கிறேன். தங்க தமிழ்ச்செல்வனும் அடங்கியிருக்கிறார். ஸ்டாலினும் இருக்கிறார்.
கம்பராமாயணத்தில் ராமர், குகனையும் சுக்ரீவனையும் எப்படி உடன்பிறவாத சகோதரர்களாக ஏற்றுக்கொண்டாரோ, அதேபோல ஸ்டாலினும் எங்கள் இருவரையும் சகோதரர்களாக ஏற்றுக்கொண்டுள்ளார். எங்கள் இயக்கம் இருக்குவரை இந்த இயக்கத்தில்தான் இருப்போம்'' என்றார் கலைராஜன்.