

மதுக்கடைகளை மூடக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் ராமதாஸ் தலைமையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பை மதித்து, தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ராமதாஸ் பேசியதவது
இந்தியாவில் மது குடிப்பதால் ஆண்டுக்கு 18 லட்சம் பேரும், தமிழகத்தில் 2 லட்சம் பேரும் உயிரிழக்கின்றனர். 11 வகையான உயிர்க் கொல்லி நோய்கள் மதுவால் உருவாவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் குஜராத், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கிறது. கேரளாவில் வரும் அக்டோபர் முதல் மதுவிலக்கை அமல்படுத்த உள்ளனர். இப்படி பல மாநிலங்கள் மதுக்கடைகளை மூடிவரும் நிலையில் தமிழகம் கூடுதலாக மதுக்கடைகளை திறந்து வருகிறது.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைசர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.