SIR | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

SIR | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 15 லட்சத்து 6 ஆயிரத்து 77 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 1 லட்சத்து 74 ஆயிரத்து 549 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.தினேஷ் குமார் வெளியிட்டார். இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், 2026 நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன்படி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 6 ஆயிரத்து 77 வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு தீவிர திருத்த பணிகளின் போது 6 தொகுதிகளில் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெறப்படாத, இறந்த 71,945 பேர், முகவரியில் வசிக்காத 10,359 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்த 81,246 பேர், இருமுறை பதிவு செய்த 10,652 பேர் மற்றும் மற்றவை 167 என மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இதில், அதிகபட்சமாக ஓசூர் தொகுதியில் 43,646 வாக்காளர்களும், வேப்பனப்பள்ளியில் 28,623, தளி 28,314, பர்கூர் 25,748, கிருஷ்ணகிரி 25,461, ஊத்தங்கரையில் 22,757 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக ஆட்சியர், கோட்டாட்சியர், மாநகராட்சி, நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 2092 வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வாக்காளர்கள் தங்களது பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

SIR | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
SIR | நெல்லை மாவட்டத்தில் 2.14 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in