

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரே நாளில் 1.74 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை மொத்தம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் போலி வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையாக, கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன. அதன்பின் கடந்த மாதம் 19-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும், தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரியில் இல்லாதவர்கள் என 66.44 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 19 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜன.2-ம் தேதி வரை 7.40 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். கடந்த 2 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி கடந்த சனிக்கிழமை மட்டும் 1.74 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை மொத்தம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தம் 66.44 லட்சம் பேர் விண்ணப்பிக்க வேண்டியுள்ள நிலையில், இதுவரை 10 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க ஜன.18-ம் தேதி கடைசி நாளாகும். பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.