

பொதுத்துறை வங்கிகளைப்போல் தபால்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் விரும்பிய இடத்திற்கு இடமாறுதல் வழங்க வேண்டுமென்று தபால்துறை பெண் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் பெண்களின் பணி பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்கள் விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளை மத்திய நிதி அமைச்சகம் கடந்த வாரம் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் பணியிடம் மாறுவதில் அவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தபால் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், தங்களுக்கும் வேண்டிய இடத்தில் பணிபுரிய இடமாறுதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை வட்டத்துக்குட்பட்ட தபால் நிலையம் ஒன்றில் அஞ்சல் உதவியாளராக பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் இதுபற்றிக் கூறும்போது, “ எனது சொந்த ஊர் பேராவூரணி. தேர்வின் மூலம் கடந்த 2011-ம் ஆண்டு அஞ்சலக உதவியாளர் பணிக்கு வந்தேன். எனது சொந்த மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் சென்னை புறநகர் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, எனது பெற்றோர் ஊரில் வசித்து வருகிறார்கள். தபால் நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுப்பு என்பதால் ஒரு நாளில் சொந்த ஊருக்கு சென்று திரும்புவது என்பது இயலாத காரியம்.
தபால் துறையில் பரஸ்பர இடமாறுதல் போன்ற வசதிகள் இருந்தாலும் அது உடனடியாக கிடைப்பதில்லை. மேலும் இடமாறுதலுக்கு விண்ணப்பித்தால் அது கிடைப்பதற்கு பல வருடங்கள் ஆகிறது. எனவே பொதுத்துறை வங்கிகளைப் போல தபால் துறையிலும் பெண் ஊழியர்களுக்கு வேண்டிய இடத்தில் பணிசெய்ய இடமாறுதல் அளிக்க வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக அகில இந்திய தபால் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் தமிழ்நாடு வட்டத் தலைவர் ஜெ.ஸ்ரீவெங்கடேஷ் கூறும்போது, “தபால் துறையில் பணிபுரிகிற பெண் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது உறவினர்களை பிரிந்து பணிபுரியும் சூழல் உள்ளது. பணியிடமாறுதலுக்காக விண்ணப்பித்தால் குறைந்தது 5 ஆண்டுகளாவது ஆகிறது. எனவே வங்கித்துறையைப்போல தபால் துறை பெண் ஊழியர்களுக்கும் விருப்பப்படி பணியிடமாறுதல் வழங்க மத்திய தகவல் தொடர்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதுபற்றி தபால்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பெண் ஊழியர்களின் பாதுகாப்பில் தபால் துறை முழு அக்கறை செலுத்தி வருகிறது. பெண் பணியாளர்கள் இடமாற்றம் வேண்டி விண்ணப்பித்தால் முடிந்த அளவு விரைவில் இடமாறுதல் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப இடமாறுதல் வழங்குவது குறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
தபால் துறையில் பணிபுரிகிற பெண் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது உறவினர்களை பிரிந்து பணிபுரியும் சூழல் உள்ளது. பணியிடமாறுதலுக்காக விண்ணப்பித்தால் குறைந்தது 5 ஆண்டுகளாவது ஆகிறது. எனவே வங்கித்துறையைப்போல தபால் துறை பெண் ஊழியர்களுக்கும் விருப்பப்படி மாறுதல் வழங்க வேண்டும்.