இளையராஜா பாடல்களை அனுமதி பெறாமல் இசைப் போட்டிகளில் பயன்படுத்தக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

இளையராஜா பாடல்களை அனுமதி பெறாமல் இசைப் போட்டிகளில் பயன்படுத்தக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

இளையராஜா இசையில் வெளியான பாடல்களை அவரது அனுமதி பெறாமல் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உறுதிப்படுத்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்திருந்த வழக்கில், அகி இசை நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம் கிரி டிரேடர்ஸ் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் தான் இசையமைத்து வெளியிட்ட பாடல்களை தன்னுடைய அனுமதி பெறாமல் பயன்படுத்துவதாகவும் அந்தப் பாடலுக்கு தான் முழுமையான உரிமையை பெற்றுள்ளதாகவும் எனவே அந்த பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,   ஏற்கெனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடத்திய நீதிபதி அனிதா சுமந்த்  ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை நிரந்தரமாக்கி உத்தரவிட்டுள்ளார். அவரது பாடல்களை திரையரங்குகளைத் தவிர வேறு எங்கும் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளார்.

குறிப்பாக ஆன்லைன் உள்ளிட்ட ரேடியோ  நிறுவனங்கள், இசைப் போட்டிகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தக் கூடாது என்றும் பயன்படுத்த வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே அகி இசை நிறுவனம் இளையராஜாவின் பாடல்களை 10 வருடத்திற்கு பயன்படுத்த உரிமை உள்ளதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in