பாடப் புத்தகங்கள் விவகாரம்; கையாலாகாத தமிழக அரசு: ஸ்டாலின் தாக்கு

பாடப் புத்தகங்கள் விவகாரம்; கையாலாகாத தமிழக அரசு: ஸ்டாலின் தாக்கு
Updated on
1 min read

பள்ளிகள் திறந்தும் 3,4,5 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களை அனுப்ப இயலாத கையாலாகாத அரசாக தமிழக அரசு உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பள்ளிக் கல்வியில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மீதமுள்ள 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ம் தேதிக்குப் பிறகே கிடைக்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. ஆனால், இதுவரை 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஜூன் 3-ம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், 3, 4, 5, 8 ஆகிய நான்கு வகுப்புகளுக்கான புத்தகங்கள் முற்றிலுமாக கிடைக்கவில்லை என பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''பள்ளிகள் திறந்தும் 3,4,5 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களை அனுப்ப இயலாத கையாலாகாத அரசாக தமிழக அரசு உள்ளது.

குடிநீர் முதல் கல்வி வரை எதைப்பற்றியும் கவலை இல்லாதவர் கையில் ஆட்சி சிக்கி உள்ளது. இனிமேலாவது துரிதமாகச் செயல்பட்டு பாடப்புத்தகங்கள் கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். செய்யுமா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in