

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. இங்கு அரியவகை கல்வெட்டு கள், கோட்டைகள் நிறைந்து காணப்படுவதே இதற்கு சான்று. இதே போல் வீரம் விளைந்த மண்ணாகவும் இன்று வரை திகழ்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் இம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ராணுவத்தில் இணைந்து, போரில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பி.திப்பனப்பள்ளி, தானம்பட்டி, சிப்பாயூர், குட்டூர், சாமந்தமலை, பச்சிகானப்பள்ளி, சூளகிரி, தேவச முத்திரம், மஜீத்கொல்லஅள்ளி உட்பட பல கிராமங்களில் இருந்தும் முப்படைகளில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதில் திப்பனப்பள்ளி கிராமமும் ஒன்று.
ராணுவ கிராமம்
கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பி.திப்பனப்பள்ளி கிராமம். இந்தக் கிராமத்துக்குள் நுழையும்போதே நம்மை வரவேற்பது மிடுக்காக வணக்கம் வைக்கும் ராணுவ வீரரின் சிலைதான். இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் பிரதான தொழில் விவசாயம். ஆனால், கிராமத்தில் இருந்து தலைமுறை, தலைமுறையாக வீட்டுக்கொருவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
ஆரம்ப காலத்தில் விவசாயம் சரிவர இல்லாத காரணத்தால் சம்பளத்துக்காக ராணுவத்துக்குச் சேர்ந்தனர். ஆனால், தற்போது இளைய தலைமுறையோ நாட்டுப்பற்றால் ராணுவத்தில் இணைய தொடங்கி பணியாற்றி வருகின்றனர். இப்போதும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்டோர் இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் சிப்பாய் முதல் ஆர்டினரி கேப்டன் என்ற நிலைகளில், பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகிறார்கள். ஏற் கெனவே பணியாற்றி 300-க்கும் மேற் பட்டவர்கள் ஓய்வுபெற்றுள்ளனர்.
6 பேர் உயிர் தியாகம்
இதுகுறித்து ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுபேதாரும், மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் தலைவருமான பி.சின்னப்பன் கூறியதாவது:
’’எங்கள் கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் ராணுவத்தில் பணியாற்று கின்றனர். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி என்பவர் 1914-19ம் ஆண்டு நடந்த முதல் உலகப் போரில் இறந்துவிட்டார். அவர் உடல்கூட வரவில்லை. இதேபோல் இரண்டாம் உலகப் போர் 1939-45ம் ஆண்டுகளில் நடந்தபோது இதே கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன், குப்புசாமி, பெருமாள், முனிசாமி ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றினர்.
அவர்களில் யாரும் உயிருடன் திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மட்டும் எங்கள் கிராமத்துக்கு வந்தது. இதுபோல் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் இந்த நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களது 6 பெயரையும் கல்வெட்டாக எழுதி வைத்துள்ளோம்.
அவ்வாறு உயிர் தியாகம் செய்துள்ளவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி எங்கள் கிராமத்தில் `ஜெய் ஜவான்’ சிலையை அமைத்தோம். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26-ம் தேதியும், ஆகஸ்ட் 15-ம் தேதியும் ஜெய் ஜவான் சிலை முன்பு எங்கள் சங்க கொடியினை ஏற்றி, வீரவணக்கம் செலுத்திவருகிறோம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் கள் ராணுவத்தில் பணியாற்றி வரு கின்றனர். பல்வேறு இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப்படும் வீரர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படு கிறது. எங்கள் பிள்ளைக்காக இம் மாவட்டத்தில் கேந்திரீய வித்யாலயா பள்ளியைத் தொடங்க மத்திய அரசு முன்வர வேண்டும்’’ என கோரிக்கையையும் முன்வைத்தார்.