

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் 17 மின்சார ரயில்களின் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் நிலையத்தில் ரூ.735 கோடியில் மறுசீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரம்மாண்ட நடை மேம்பாலம் அமைக்கும் பணி 10, 11-வது நடைமேடைகளில் தொடங்கப்பட்டது.
இதன் காரணமாக, கடந்த பிப்.19-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மின்சார ரயில்கள் 10, 11-க்கு பதிலாக 5, 6-வது நடைமேடைகளில் இயக்கப்பட்டன.
தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் சேத்துப்பட்டில் இருந்து எழும்பூர் செல்லும்போதும், மறுமார்க்கத்தில் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூருக்கு செல்லும்போதும் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
தினசரி ரயில் சேவைகள் எண்ணிக்கை 204-ல் இருந்து 115 ஆக குறைக்கப்பட்டது மற்றும் தாமதமான இயக்கம் காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக பயணிகள் கடும் அவதியடைந்தனர். இரவில் பணிகள் இந்த நிலையில், 42 நாட்களுக்குப் பிறகு, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம் கடந்த 3-ம் தேதி சீரானது.
வழக்கமான அட்டவணைப்படி, வழக்கம்போல 10, 11-வது நடைமேடைகளில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டதால், பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும், 10, 11-வது நடை மேடைகளில் பணி இன்னும் நிறைவடையவில்லை.
படிக்கட்டுகள், எஸ்கலேட்டர், குடிநீர் வசதிகள் இருந்தபோதிலும், தற்காலிக ஏற்பாடாக ஆங்காங்கு மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. சாய்வுதளம் அமைப்பதற்கான பணிகள் இரவில் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, கடற்கரை-தாம்பரம் இடையே 8 ரயில்களின் சேவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் 3 மின்சார ரயில்களும், திருமால்பூர் - கடற்கரை மார்க்கத்தில் ஒரு ரயிலும் பகுதி ரத்து செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, 17 ரயில்களின் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, கடற்கரை - தாம்பரத்துக்கு இன்றும், நாளையும் (ஏப்.6, 7) அதிகாலை 5.50, இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
கூடுவாஞ்சேரி - கடற்கரைக்கு இரவு 9.45, 10.10, 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன.
திருமால்பூர் - கடற்கரைக்கு இரவு 8 மணி, செங்கல்பட்டு - கடற்கரைக்கு இரவு 10.20, 11.00 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
ஏப். 6, 7, 8-ம் தேதிகளில் கடற்கரை - செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.50, 4.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன.
இதுதவிர, 5 மின்சார ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.