குரங்கணி தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட களப் பணியாளர்கள் இல்லாதது காரணமா?- வனத் துறை அதிகாரிகள் விளக்கம்

குரங்கணி தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட களப் பணியாளர்கள் இல்லாதது காரணமா?- வனத் துறை அதிகாரிகள் விளக்கம்
Updated on
2 min read

தேனி மாவட்டம் குரங்கணி தீ விபத்தில் 10 பேர் பலியானதற்கு வனத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாததுதான் காரணம் என வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு வனத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 10 பேர், அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ‘அந்த குழுவினர் வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் சென்றுள்ளனர். மிகப் பரந்த வனப் பரப்பில் அதை கண்காணிப்பது சிரமம்’ என்று வனத் துறை கூறியுள்ளது. இது நாடு முழுவதும் இயற்கையை நேசிப்பவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக முன்னாள் வனத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

மலையேற்றத்துக்கென அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் உள்ளன. அப்பகுதியில் செல்ல மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். அப்போது வனத்துறை சார்பில் ஒரு களப் பணியாளர் உடன் அனுப்பி வைக்கப்படுவார். களப்பணியாளர்களுக்கு அந்த வனத்தைப் பற்றி நன்கு தெரிந்திருப்பதால், பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருவார்.

ஆனால், வனத் துறையில் வன களப்பணியாளர்கள், தீத்தடுப்பு காவலர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் போன்றோரை நியமித்து பல ஆண்டுகள் ஆகிறது. 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அதனால், மலையேற்றத்துக்கு வனத் துறை பெரும்பாலும் அனுமதி அளிப்பதில்லை. இதனால், மலையேற்றப் பயிற்சி ஏற்பாட்டாளர்கள், வனத் துறையிடம் அனுமதி பெறாமல் சென்று சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

காட்டுயிர் ஆர்வலர் ஓசை காளிதாஸ் கூறும்போது, ‘‘காடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானது. நன்கு பயிற்சி பெற்ற வனத் துறை உயரதிகாரியையே யானை கொன்றுவிடுகிறது. அங்கு சாகசத்துக்கு இடமில்லை. இயற்கையை நேசிக்க மட்டுமே செல்ல வேண்டும். வனப் பகுதிக்குள் செல்லும்போது, உள்ளூர்வாசியை கண்டிப்பாக உடன் அழைத்துச் செல்ல வேண்டும். வனத்தில் தீ ஏற்பட்டால், உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரவ விட்டுவிட்டால் அதை அணைப்பது எளிதானதல்ல. அதற்கு போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். உள்ளூர் மக்களுக்கும், வனத் துறையினருக்கு மான உறவு மேம்பட வேண்டும். அப்போதுதான் தீ ஏற்பட்ட உடனே தகவல் கிடைத்து அணைக்க முடியும். ஆனால், வனத் துறையில் 50 சதவீத பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன’’ என்றார்.

அனுமதி இன்றி மலையேற்றத்தில் ஈடுபடுவது தொடர்பாக வனத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

குரங்கணி மலையில் தனியார் டீ எஸ்டேட், மழைவாழ் மக்கள் வசிப்பிடம், சாதாரண மலைப் பகுதி ஆகியவை உள்ளன. ஆங்காங்கே காப்புக் காடுகள் இருக்கும். உள்ளூர் மக்கள் செல்லவும், தனியார் எஸ்டேட்டுக்கு தொழிலாளர்கள், விருந்தினர்கள் செல்லவும் வழிகள் உள்ளன. அந்த வழியாக பொதுமக்கள் செல்ல தடை இல்லை.

மலையேற்றத்தில் ஈடுபடுவோர் அந்த வழியில்தான் செல்கின்றனர். தனியார் எஸ்டேட்டில் தங்கி மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர். அதனால், அவர்கள் வனத் துறையிடம் அனுமதி பெறுவதில்லை. மிகப்பெரிய வனப் பரப்பில் நுழைய பல வழிகள் இருப்பதால் அதை கண்காணிப்பது சிரமம். வனத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

4 நாட்களாக தீ

“அதிகாரிகள் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும், வனத் துறைக்கு தெரியாமல் வெளி நபர்களால் வனப் பகுதிக்குள் நுழையவே வாய்ப்பில்லை. ஆனால், நடந்த சம்பவத்துக்கு மலையேற்ற ஏற்பாட்டாளர்கள் மீது பழி போடுவது, வனத் துறையின் பொறுப்பை தட்டிக் கழிப்பதாகவே உள்ளது.

அந்த மலையில் கடந்த 4 நாட்களாகவே தீப்பற்றி வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், வனத் துறையின் கீழ்நிலை அதிகாரிகள், மலையேற்றத்துக்கு அனுமதித்து, 10 பேர் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்துள்ளனர். இது வனத்துறையின் அலட்சியத்தையே காட்டுகிறது’’ என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in