

அரியலூர் மாவட்டத்தில் சாமி சிலைகள் தொடர்ந்து கடத்தப்பட்டும் மீட்கப்பட்டும் வரும் நிலையில், ராஜேந்திர சோழன் அரண்மனை இருந்த மாளிகை மேட்டில் கலை நயம்மிக்க சிலைகளும் பொக்கிஷங்களும் புதைந்து கிடக்கின்றன. அரசு அதை அகழ்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு சுமார் 400 ஆண்டு காலம் பிற்காலச் சோழர்கள் ஆட்சி செய்ததாக வரலாறு சொல்கிறது. இராசேந்திர சோழனின் அரண்மனை இங்குள்ள மாளிகை மேட்டில் இருந்திருக்கிறது. மாலிக்காபூர் படையெடுப்பு மற்றும் மாறவர்மன் சுந்தரபாண்டியன் படையெடுப்புகளால் மாளிகை மேடு அரண்மனை தகர்க்கப் பட்டதாகவும் பிற்பாடு அது கவனிப்பாரின்றி கிடந்து மண்ணுக்குள் புதையுண்டதாகவும் சொல்லப்படுகிறது.
மாளிகை மேடு அரண்மனை புதையுண்ட பகுதியில் அரிய சிலைகளும் பொக்கிஷங்களும் புதையுண்டு கிடப்பதாக பல ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிலை கடத்தல் கும்பல்கள் அரியலூர் மாவட்டத்தை குறிவைத்து கைவரிசை காட்டுவதை அடுத்து, மாளிகை மேட்டில் புதைந்து கிடக்கும் சிலைகளை தோண்டி கடத்துவதற்கு அந்தக் கும்பல் திட்டமிடுகிறது. அதற்கு முன்னதாக அரசு அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்து சிலைகளையும் பொக்கிஷங் களையும் வெளிக் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய ஜெயங்கொண்டம் ஒன்றிய பாஜக தலைவர் ஜம்புலிங்கம் கூறியதாவது: ‘‘ஒருமுறை தொல்லியல் துறை இந்த இடத்தை அகழ்வு செய்து கற்சிலைகளை வெளியில் எடுத்தார்கள். அந்த சிலைகள் இன்னமும் சோழ மாளிகைக்கு பக்கத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு இல்லாததால் அவற்றில் சில காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
மண்ணுக்குள் புதைந்து விட்ட அரண்மனைக்குள் பொக்கிஷங் களும் அரிய சிலைகளும் இருக்க வேண்டும். தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்டு வரப்பட்டுள்ள அர்த்தநாரீஸ்வரர் கற்சிலையை 4 கோடி ரூபாய்க்கு அங்கு விற்றிருக்கிறார்கள். இதைத் தெரிந்து கொண்டு வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் என்ற பெயரில் சிலைக் கடத்தல் கும்பல்களும் இந்தப் பகுதியில் நடமாடுகின்றன. எனவே இந்தப் பகுதியை அரசு முழுமையாக அகழ்வு செய்து அரிய பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் குடவாயல் பாலசுப்பிர மணியனிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசின் தொல்லியல் துறையினர் ஏற்கெனவே அங்கு அகழ்வாராய்ச்சி செய்து கல்திரு மேனி சிலைகளை எடுத்துள்ளனர். அங்கிருந்து செப்புத் திருமேனி சிலைகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை.
மாலிக்காபூர் படையெடுப்பின் போது பெரும்பாலான கோயில் களில் செப்புத் திருமேனி சிலைகளை பல இடங்களில் பதுக்கிப் பாதுகாத்திருக்கிறார்கள். இப் போது சில இடங்களில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளும் போது பூமிக்குள் இருந்து சிலைகள் வெளிப்படுகின்றன. அந்தச் சிலைகள் அப்படிப் பாது காக்கப்பட்டவைதான். எனவே, அரசு இந்த விஷயத்தில் சிறப்புக் கவனம் எடுத்து மெட்டல் டிடெக்டர் மூலம் செப்புச் சிலைகள் இருக்கும் இடங்களை கண்டுபிடித்துப் பத்திரப்படுத்த வேண்டும்’’ என்றார்.