

கோப்புப் படம்
சென்னை: சென்னை மாவட்டத்தில் பறக்கும் படைகளால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால், ரூ.1.66 கோடி உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு நடைமுறை மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகின்றன.
பின்பு, விசாரணையில் முறையான ஆவணங்களை மேல்முறையீட்டு குழுவிடம் தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை விடுவிப்பதற்கு மேல்முறையீட்டு அலுவலர்கள் அடங்கிய குழு உதவி ஆணையர் தலைமையில், சென்னை மாநகராட்சியில் (தொடர்பு எண் 94451 90300)) அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை விடுவிக்க மேல்முறையீடு செய்பவர்கள் மனுவினை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, விடுவிப்பு ஆணையினைப் பெற்று, அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அல்லது ரொக்கத்தினை பறக்கும் படை அலுவலர் மூலமாக விடுவிப்பு ஆணையினை கருவூலத்தில் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கத்தை விடுவிக்கக் கோரி இதுவரை 113 மேல்முறையீடுகள் பெறப்பட்டன.
கடந்த 8-ம் தேதி வரை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 98 மேல்முறையீடுகளில் ரூ.1,66,75,283 விடுவிக்கப்பட்டுள்ளது. 15 மேல்முறையீட்டு மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.