மக்கள் எனக்கு அளித்தது வாக்கு அல்ல; அன்பும் நம்பிக்கையும்: ஜோதிமணி

மக்கள் எனக்கு அளித்தது வாக்கு அல்ல; அன்பும் நம்பிக்கையும்: ஜோதிமணி
Updated on
1 min read

மக்கள் எனக்கு அளித்தது அன்பும் நம்பிக்கையும் என, ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கரூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"கரூர் தொகுதி மக்கள் 4 லட்சத்து 20,546 வாக்குகள் வித்தியாசத்தில் எனக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளனர். இது சாமானிய மக்களில் ஒருவருக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.

பல வாதங்களைப் புறந்தள்ளி என்னைப் போன்றவர்களுக்கு ராகுல் காந்தி வாய்ப்பளித்தார். மக்கள் என்னைப் போன்றவர்களை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை கரூர் தொகுதி மக்கள் பிரதிபலித்திருக்கிறார்கள்.

களம் மிகக்கடினமாக இருந்தது. தொடர்ந்து மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல் என 60 நாட்கள், அதிகாரத் துஷ்பிரயோகங்களைக் கடந்து அனைத்துக் கட்சியினரும் பணியாற்றி இந்த வெற்றியை உருவாக்கியிருக்கிறார்கள். எனக்கு அளித்தது வாக்கு அல்ல, அன்பும் நம்பிக்கையும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்கு வித்தியாசம் மிக அதிகமாக இருந்தது. அந்த அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும்.

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இரவு பகல் பாராமல் உழைப்போம்.

தம்பிதுரை மூத்த அரசியல்வாதி. அவரை நான் மதிக்கிறேன். ஆனால், என்னிடம் பணம் இல்லை. அதனால் அவர் எளிதில் ஜெயித்துவிடுவார் என ஜனநாயகத்திற்குப் புறம்பான வாதத்தை அவர் தெரிவித்ததில் வருத்தம் இருந்தது. மக்கள் பணபலத்தை நம்ப மாட்டார்கள் என நிரூபித்துள்ளனர்".

இவ்வாறு ஜோதிமணி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in