

மதுரையில் உள்ள தமிழ் இசைச் சங்கத்தின் நிர்வாக அறங்காவலர் பொறுப்பிலிருந்து சேக்கப்ப செட்டியாரை நீக்க முடிவெடுத்திருக்கிறார் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார்.
எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் வளர்ப்பு மகன் ஐயப்பன் என்ற முத்தையாவைப் பெற்ற தந்தை சேக்கப்ப செட்டியார். இவர், செட்டிநாடு அரண்மனையுடன் தொடர்புடைய மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் நிர்வாக அறங்காவலர் மற்றும் கவுரவச் செயலாளராக இருக்கிறார். இதன் செயலாளராக இருந்த ஏ.ஆர்.ராமசாமியை ராஜா சர் அண்ணா மலைச் செட்டியார் நினைவு அறக் கட்டளை உள்ளிட்ட சில முக்கிய அறக்கட்டளைகளிலிருந்து கடந்த வாரம் அதிரடியாய் நீக்கினார் வளர்ப்பு மகன் முத்தையா. இது எம்.ஏ.எம். தரப்பை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த நிலையில், மதுரை தமிழ் இசைச் சங்க அறக்கட்டளையின் நிர் வாகக் குழு கூட்டத்தை இன்று (செப்.29) அவசரமாய் கூட்டி இருக்கிறார். இந்தக் கூட்டத்தில், சேக்கப்ப செட்டி யாரை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மற்றும் கவுரவச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்குவதற்கு எம்.ஏ.எம். முடி வெடுத்திருப் பதாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து எம்.ஏ.எம். தரப்பில் ‘தி இந்து’விடம் பேசியவர்கள் கூறியதாவது: ராஜா வீட்டுப் பிள்ளையான எம்.ஏ.எம். ஏகப்பட்ட பணியாளர்கள் சகிதம் வசதி யாக இருந்து பழக்கப்பட்டவர். எம்.ஏ.எம். அரண்மனையில் இரண்டு மூன்று தலைமுறையாக வேலை செய்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எம்.ஏ.எம்-மை வாழவைக்கும் தெய்வமாக பார்க்கிறார்கள். ஆனால், ஆட்குறைப்பு, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அந்தப் பணியாளர்கள் பலரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார் முத்தையா.
அதேசமயம், அவர் தனது அலுவலகத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து பலபேரை பணிக்கு வைத்திருக்கிறார். தினமும் அரண் மனையில் நூறு பேருக்கு குறையாமல் மூன்று வேளையும் சாப்பாடு நடக்கும். பால் மட்டுமே தினம் 50 லிட்டர் தேவைப்படும். இதையெல்லாம் குறைக்கப் பார்த்தார்கள். எம்.ஏ.எம். பயன்படுத்தும் பிரத்யேக லிஃப்ட்டுக்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணம் 47 ஆயிரம் ரூபாய். செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்திலிருந்துதான் இந்தத் தொகை செலுத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு செலுத்தப்படாததால் அதை எம்.ஏ.எம். தனது சொந்தப் பணத்திலிருந்து செலுத்தி இருக்கிறார்.
எம்.ஏ.எம். தனது காரை அண்மையில், கிண்டியில் உள்ள சர்வீஸ் ஸ்டேஷனுக்கு சர்வீஸுக்கு அனுப்பி இருந்தார். பதினைந்து நாள் ஆகியும் சர்வீஸ் முடிந்து கார் திரும்பி வரவில்லை. விசாரித்த போது, 2012-லிருந்து அந்தக் காருக்கு சர்வீஸ் செய்ததற்கு கட்டணம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். இதையும் எம்.ஏ.எம்.தான் செட்டில் செய்தார்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல், வளர்ப்பு மகன் முத்தையா நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார் எம்.ஏ.எம். இன்றைக்கு தேதியில் முத்தையாவிடம் பெரும்பகுதி சொத்துகள் மற்றும் செட்டிநாடு குழும நிறுவன பொறுப்புகள் அனைத்தும் இருந்தாலும் அதையும் தாண்டி இன்னும் நூறாண்டுகளுக்கு அள்ளிக் கொடுத்தாலும் குறையாத அளவுக்கு சொத்துகளும் பொருட்களும் எம்.ஏ.எம்-மிடம் இருக்கிறது.
ஆனால், அவரிடம் இப்போது நிம்மதியில்லை. வளர்ப்பு மகன் விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே எல்லாம் ஏடாகூடமாக நடந்து விட்டதை எம்.ஏ.எம். இப்போதுதான் உணர்கிறார். இப்போதைக்கு அவருக்குத் தேவை நிம்மதி.
இதுவரை பொறுமையாக இருந்த எம்.ஏ.எம்-மும் இப்போது தனது அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறார். முத்தையாவின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் அவரை பெற்ற தந்தை சேக்கப்ப செட்டியார் இருப்பதாக சந்தேகப்படுகிறார் எம்.ஏ.எம். எனவே, முதல்கட்டமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகி விட்டார்.
சேக்கப்ப செட்டியார் வசம் உள்ள தமிழ் இசைச் சங்க அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பதவி இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அவரை நிரந்தரமாக அறக்கட்டளையிலிருந்து நீக்குவதற் காகவே எம்.ஏ.எம். மதுரை செல்கிறார். மதுரையிலிருந்து திரும்பியதும் 30-ம் தேதி அவரது ஐயா அண்ணாமலைச் செட்டியார் பிறந்த நாள் விழா வருகிறது. அன்றுதான் எம்.ஏ.எம்-முக்கும் பிறந்த நாள். அந்த விழாக்கள் முடிந்ததும் அடுத்தடுத்து வேறு சில முக்கிய முடிவுகளை எடுக்கவும் அவர் தயாராகி வருவதாகவே தெரிகிறது.