மின் உற்பத்தியில் என்எல்சி புதிய சாதனை: நிலக்கரி வெட்டி எடுப்பதிலும் இலக்கை தாண்டியது

மின் உற்பத்தியில் என்எல்சி புதிய சாதனை: நிலக்கரி வெட்டி எடுப்பதிலும் இலக்கை தாண்டியது
Updated on
1 min read

மார்ச் 2014 உடன் முடிவடைந்த நிதியாண்டில் என்எல்சி நிறுவனம் இதுவரை இல்லாத மின்னுற்பத்தி மற்றும் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுத்தலில் புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை என்எல்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

என்எல்சி நிறுவனம் நெய்வேலியில் 3 சுரங்கங்கள் மற்றும் 3 அனல்மின் நிலையங்களுடனும், ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சாரில் ஒரு சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையம் என மொத்தம் 4 திறந்தவெளி சுரங்கங்கள் மற்றும் 4 அனல் மின்நிலையங்கள் மூலம் மணிக்கு 2 ஆயிரத்து 470 மெகாவாட் மின்னுற்பத்தி செய்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 2013 முதல் 31 மார்ச் 2014 -ம் ஆண்டு வரையிலான நிதியாண்டில் இந்நிறுவனம் மேல் மண் நீக்கம், பழுப்பு நிலக்கரி வெட்டியெடுத்தல், மின் உற்பத்தி மற்றும் மின்சக்தி ஏற்றுமதி ஆகிய அனைத்திலும் அரசு நிர்ணயித்த இலக்கைக் கடந்தது மட்டுமின்றி புதிய சாதனைகளையும் பதிவு செய்துள்ளது.

2012-13-ம் ஆண்டில் வெட்டியெடுக்கப்பட்ட மேல் மண் நீக்கத்தைக் காட்டிலும் 2013-14 நிதியாண்டில் 0.41 சதவீதம் கூடுதலாகும். அதே போன்று பழுப்பு நிலக்கரி 1.47 சத வீதம் கூடுதலாக வெட்டி யெடுக்கப்பட்டுள்ளது. மின்னுற்பத்தியைப் பொறுத்தவரை இந்நிறுவனத்துக்கு அரசு நிர்ணயித்த 1892 கோடியே 90 லட்சம் யூனிட் என்ற இலக்கைக் காட்டிலும் 1998 கோடியே 87 லட்சத்து, 30 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய் துள்ளது. அரசு நிர்ணயித்த மின் சக்தி ஏற்றுமதி இலக்கான 1574கோடியே 20 லட்சம் யூனிட் என்ற இலக்கைக் காட்டிலும் 1695 கோடியே 37 லட்சத்து, 30 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்னுற்பத்தி பகிர்மானக் கழகத்துடன் இணைந்து என்எல்சி அமைத்துவரும் நிலக்கரியால் இயங்கக் கூடிய 1000 மெகா வாட் திறனுடைய அனல்மின் நிலையத்துக்கு ஒடிசா மாநிலம் மகாநதி நிலக்கரி நிறுவனத்திடமிருந்து ஆண்டுக்கு 30 லட்சம் டன் நிலக்கரி பெறும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in