Published : 27 May 2019 02:17 PM
Last Updated : 27 May 2019 02:17 PM

ராகுலையே மிரட்டிய சிதம்பரத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?- தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு தமாகா கேள்வி

தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸார் ராகுல் காந்தியின் விசுவாசிகளா? சிதம்பரத்தின் விசுவாசிகளா? என நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. என்ன செய்யப் போகிறீர்கள்? என்று தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.முனவர் பாட்சா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அக்கட்சிக்கு 52 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அமேதி (உ.பி), வயநாடு (கேரளா) என 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது குடும்பத்தினரின் தொகுதியான அமேதியில் தோல்வி அடைந்தார். குஜராத், ராஜஸ்தான், டெல்லி உட்பட 17 மாநிலங்களில் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. இதனால், மக்களவையில் இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வாரிசு அரசியலால் தான் காங்கிரஸ் தோற்றது என்றும் ப.சிதம்பரம், கமல் நாத், அசோக் கெலாட் ஆகியோர் தங்கள் மகன்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு வற்புறுத்தியதாகவும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சூழலில் ப.சிதம்பரத்துக்கு எதிராக தமிழ் மாநில காங்கிரஸ் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.முனவர் பாட்சா இன்று வெளியிட்ட அறிக்கையில், ''அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவில் ராகுல் காந்தி ப.சிதம்பரத்துக்கு எதிராக தனது மகனுக்கு சீட் கேட்டு மிரட்டினார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன் நாகரிகமாக வெளியேறி தமாகாவை உருவாக்கிய தலைவர் வாசனை, தொடர்ந்து விமர்சிக்கிற காங்கிரஸாரைக் கேட்கிறேன். ராகுல் காந்தியையே மிரட்டிய சிதம்பரத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?

தலைவர் மூப்பனார் பிரதமராக வரக்கூடிய வாய்ப்பு வந்தபோது திமுகவுடன் சேர்ந்து தமிழன் பிரதமராவதைத் தடுத்த சிதம்பரம் இந்தத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கத் தயாராக இல்லை. தேர்தலுக்குப் பின் யார் பிரதமர் என்பதைத் தீர்மானிக்கலாம் என்று சொல்லி எப்படி தன் மகனுக்கு எம்.பி.சீட் இல்லை என்றால் ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டியதைப் போல், தனக்கு பிரதமர் பதவி தரவில்லை என்றால் ஆட்சியே அமையாமல் செய்துவிடுவேன் என மிரட்டிய சிதம்பரம் பகையாளி குடும்பத்தை உறவாடிக் கெடுத்திருக்கிறார்.

மகாத்மா காந்தி, ராஜாஜிக்கு எதிராக ஒரு கிளிக் வேலை செய்கிறது என்றவுடன் தலைவர் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்து காந்திக்கே தவறை உணர்த்திய தன் மானத் தலைவர் காமராஜர்.

ஆனால், சிதம்பரத்திடம் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?  சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், கே.ஆர்.ராமசாமி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் தங்கள் தன்மானத்தை நிரூபிப்பார்களா?

தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸார் ராகுல் காந்தியின் விசுவாசிகளா? சிதம்பரத்தின் விசுவாசிகளா? என நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. என்ன செய்யப் போகிறார்கள்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x