

தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளியில் இன்று காலை நீர்வரத்து 560 கனஅடியாக இருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதேபோல் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 480 கனஅடியில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 560 கனஅடியாக அதிகரித்தது.
இதேபோல் அணையின் மொத்த நீர்மட்டமான 44.28 அடியில் 41.98 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் பாசனக் கால்வாயிலும், ஆற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோல் கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து 312 கனஅடியில் இருந்து 333 கனஅடியாக இன்று காலை அதிகரித்தது. அணையின் மொத்த நீர்மட்டமான 52 அடியில் 35.80 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து பாசன கால்வாய் மற்றும் ஆற்றில் 42 அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் 9 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ஆலங்கட்டி மழை
கிருஷ்ணகிரியில் புதன்கிழமை இரவு 7 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை 9 மணி வரையில் விடாமல் பெய்தது. காற்றுடன் கூடிய மழையால் பல்வேறு இடங்களில் கூரைகள் காற்றில் பறந்தன. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கிருஷ்ணகிரி நகரில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சில இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய மழையால் மாங்காய்கள் சேதமாகின. வேலம்பட்டி பகுதியில் மாங்காய்கள் சேதமானதால் விவசாயிகள் சாலையோரம் வீசிச் சென்றன. இன்று காலை காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கிருஷ்ணகிரி -36.8, போச்சம்பள்ளி -20.4, தளி -20, நெடுங்கல் -17, பாரூர் -14.8,
தேன்கனிக்கோட்டை -12, ஓசூர் -12, பெனுகொண்டாபுரம் -7.2, மாவட்டம் முழுவதும் மொத்தம் 140.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.