தமிழக-ஆந்திர எல்லையோரத்தில் சாலை, குடிநீர் வசதியின்றி தவிக்கும் ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்கள்

தமிழக-ஆந்திர எல்லையோரத்தில் சாலை, குடிநீர் வசதியின்றி தவிக்கும் ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்கள்
Updated on
2 min read

கிருஷ்ணகிரி அருகே தமிழக-ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்கள், சாலை, குடிநீர் வசதியின்றி தவித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கிராமம் ஏக்கல் நத்தம். இந்த கிராமத்தில் உள்ள 220 குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமம், சமதள பகுதியில் இருந்து சுமார் 4 கி.மீ தூரத்தில் மலை மீது அமைந்துள்ளது.

இக்கிராமத்துக்கு நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட சில வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

மலை மீது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நாள்தோறும் 4 ஆசிரியர்கள் தினமும் மலை மீது நடந்து சென்று மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கின்றனர். போதிய சாலை வசதி இல்லாததால் மலைக்கிராம மக்கள் நாள்தோறும் தங்களது தேவைகளுக்காக மலையின் கீழ் உள்ள பெரிய சக்னாவூருக்கு வந்து அங்கிருந்து பேருந்துகள் மூலம் கிருஷ்ணகிரி நகரத்துக்கு வந்து செல்கின்றனர்.

இதே போல் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதாக இருந்தால், மலை மீது இருந்து தொட்டில் கட்டி 8 கி.மீ தூரத்தில் உள்ள மேகலசின்னம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வருகின்றனர். சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக விவசாயி ஆனந்தன் கூறும்போது, ‘‘சாலை வசதி இல்லாததால் பல்வேறு சிரமங்களை நாங்கள் சந்தித்து வருகிறோம். சக்னாவூரில் இருந்து ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு கரடுமுரடான பாதையில் வர வேண்டிய உள்ளது. அவ்வாறு வரும் போது முதியவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போல் பள்ளிக்கு ஆசிரியர்கள் காலை 11.30 மணிக்கு வருகின்றனர். மாலையில் 3.30 மணிக்கு சென்றுவிடுகின்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை இரவில் தீப்பந்தம் பிடித்தபடி தொட்டில் மூலம் தூக்கிச் செல்ல வேண்டியுள்ளது. சக்னாவூரில் இருந்து ஏக்கல்நத்தம் வரையுள்ள 4.60 கி.மீ தூரத்தில், 3.96 கி.மீ தூரம் வனப்பகுதியில் சாலை அமைக்க வேண்டும். இதற்காக ரூ.3.22 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளனர். ஆனால் சாலை அமைக்க திட்ட மதிப்பீட்டை விட கூடுதலாக 20 சதவீதம் செலவாகும் என்பதால் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

தற்போது குடிநீர் பிரச்சினையால் கடும் அவதியுற்று வருகிறோம். இங்கு இருக்கும் கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டது. மலைக்கு கீழே ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தலையொட்டி வாக்கு சேகரிக்க இதுவரை யாரும் எங்கள் ஊருக்கு வரவில்லை. எங்களுக்கும் வாக்களிக்கும் எண்ணம் முற்றிலும் இல்லை,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in