

உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பற்றி தேர்தல் பரப்புரையில் பேசுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உள்ளாட்சி துறையில் முறைகேடுகள் இருப்பதாகவும், அதன் அமைச்சர் வேலுமணி தொடர்புடையவர்களுக்கு உள்ளாட்சி துறையின் பணிகள் ஒதுக்கப்படுவதாகவும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் அமைச்சர் வேலுமணியை தொடர்புபடுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேசிவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அன்மையில் மாநகராட்சி காண்ட்ராக்டர் சபேசன் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தி ரூ.15 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்திலும் சபேசனையும் வேலுமணியையும் இணைத்து ஸ்டாலின் குற்றம்ச் சாட்டியிருந்தார்.
மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் தன்னைப்பற்றி அவதூறாக பேசுவதன்மூலம் தனது நற்பெயரை களங்கப்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டுடன், மேற்கொண்டு தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தன்னை பற்றி ஸ்டாலின் பேச தடை விதிக்க வேண்டும், ஸ்டாலின் தனக்கு ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, தேர்தல் நேரத்தில் பிரச்சாரங்களில் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டுவது வாடிக்கை தானே என தெரிவித்த நீதிபதி, வழக்கு குறித்து மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அப்போது ஸ்டாலின் தொடர்ந்து பேசுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென அமைச்சர் வேலுமணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.