

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மே 19 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், இந்த 4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், "அதிமுக ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, வரும் மே 19 அன்று நடைபெறவுள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அதிமுகவின் அதிகாரபூர்வமான வேட்பாளர்களுக்காகக் கீழ்க்கண்டவர்கள் அறிவிக்கப்படுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
சூலூர் - வி.பி.கந்தசாமி, கோவை புறநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைத் தலைவர்
அரவக்குறிச்சி - வி.வி.செந்தில்நாதன், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைச் செயலாளர்
திருப்பரங்குன்றம் - எஸ். முனியாண்டி, அவனியாபுரம் பகுதிக் கழகச் செயலாளர்
ஓட்டப்பிடாரம் - பெ.மோகன், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.