

சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். இதையடுத்து தமிழகத்தில் சட்டப்பேரவையில் 22 தொகுதிகள் காலியாக உள்ளன. நாடாளுமன்ற தேர்தலுடன் 22 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள தொகுதிகள் என அறிவிக்கப்பட்டிருந்தன. வரும் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வேளையில், அந்தத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மூன்று தொகுதிகளிலும் வழக்கைக் காரணம் காட்டி, தேர்தல் நிறுத்தி வைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஓட்டப்பிடாரம் தொகுதியில், போட்டியிட்டுத் தோல்வி அடைந்த புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார்.
ஓட்டபிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம் தேதி அன்றே தேர்தல் நடத்தப்படவேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள்கோரிக்கை வைத்துள்ளன.
இந்த நிலையில், கோவை மாவட்டம் சூலூர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ், இன்று காலை மாரடைப்பால் காலமானார். சுல்தான்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், காலையில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும் போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதில் அப்படியே மயங்கிவிழுந்தார் கனகராஜ். பிறகு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கனகராஜ் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்தவர். ஒன்றிய செயலாளர் முதலான பதவிகளை வகித்தவர். கடந்த தேர்தலின் போது சுமார் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு வயது 67. கனகராஜுக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். கனகராஜின் உடல் சுல்தான்பேட்டையில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சூலூர் கனகராஜ் எம்எல்ஏ மறைவை அடுத்து தமிழகத்தில் சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 22 என உயர்ந்துள்ளது. சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் மரணம் அடைந்ததை அடுத்து 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.