

நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
மதுரையில் உள்ள நாளிதழ் அலுவலகம் ஒன்றில் 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஊழியர்கள் கோபிநாத், வினோத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் கொல்லப்பபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டி, அவரது கூட்டாளிகள் 15 பேர் மற்றும் அப்போது ஊமச்சிக்குளம் டிஎஸ்பியாக இருந்த வி.ராஜாராம் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை மதுரை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து, 17 பேரையும் விடுதலை செய்து 9.12.2009-ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சிபிஐ சார்பிலும், கொலை செய்யப்பட்ட வினோத்தின் தாயார் பூங்கொடி சார்பிலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு, அட்டாக் பாண்டி, பிரபு என்ற ஆரோக்கிய பிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகியோருக்கு 9 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
இதில் அட்டாக்பாண்டி, பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதாகி 2 ஆண்டுக்கு மேலாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளார். இதனால், அவரது கூட்டாளிகள் 8 பேரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க போலீஸாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் ஏடிஎஸ்பி வி.ராஜாராமுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. அவர் உடனடியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அட்டாக்பாண்டியின் கூட்டாளிகள் 8 பேரும் தலைமறைவாகினர். அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் ஆரோக்கியபிரபு, ராமையா பாண்டியன், சுதாகர், ரூபன், மாலிக்பாட்ஷா ஆகியோர் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி நசீமாபானு முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சரண் அடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். விஜயபாண்டி, கந்தசாமி, திருமுருகன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.