

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், கேரள ஆளுநராக நியமிக்கப் படவுள்ளதால், ஈரோடு மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சதாசிவம், கடந்த ஏப்ரல் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின், தனது சொந்த கிராமமான ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காடப்பநல்லூரில் தங்கி விவசாயப் பணிகளை பார்த்து வந்தார். தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற சதாசிவம், லோக்பால் தலைவர், தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் போன்ற பதவிகளில் நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்ததும், பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் கேரள ஆளுநராக பதவி வகித்து வந்த ஷீலா தீட்சித், அண்மையில் ராஜினாமா செய்தார். கேரள ஆளுநர் பதவியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற சதாசிவம் நியமிக்கப்படவுள்ளதாக டெல்லி வட்டாரங்களில் தகவல் வெளியாகியது.
இதற்கான பரிந்துரையை பிரதமர் நரேந்திர மோடி அளித்ததையடுத்து சனிக்கிழமையன்று ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பவானியை அடுத்த காடப்பநல்லூரில் உள்ள சதாசிவத்திடம் ஞாயிற்றுக்கிழமை காலை இதுகுறித்து கேட்டபோது, “இது தொடர்பான உத்தரவு எதுவும் இதுவரையில் எனக்கு கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நீதித்துறை வட்டாரங்கள் கூறும்போது, “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின், பிரபல நிறுவனங்களில் சட்ட ஆலோசகராக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை வகித்த தான், இது போன்ற பணிகளுக்கு செல்வது உகந்ததல்ல என சதாசிவம் எண்ணி அதை தவிர்த்தார். தற்போது கேரள ஆளுநர் பதவி அவருக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றனர்.
கேரள ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ள தகவல் அவரது சொந்த ஊரான காடப்பநல்லூர் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.