

அமமுகவுக்கு ‘பரிசுப்பெட்டி’ சின்னம் ஒதுக்கியதால், அதிமுகவின் சாதனை பட்டியலில் இடம் பிடித்த குழந்தைகளுக்கான பரிசுப்பெட்டகத்தின் பெயரை பிரச்சாரத்தின்போது தவிர்க்க, அதிமுகவினர் திட்டமிடுகின்றனர் என, அமமுகவினர் கூறுகின்றனர்.
தமிழக மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்.,18ல் நடக்கிறது. இதில் அதிமுக, திமுக, அமமுக இடையே கடும் போட்டி உள்ளது.
நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. அதிமுக, திமுக கூட்டணிக்கு பெரும் சவாலாக இருப்பதாக கருத்தப்படும் அமமுகவுக்கு குக்கர், தொப்பி சின்னங்களை தரவிடாமல் தடுக்க, உச்ச நீதிமன்றம் வரை அதிமுக சென்று, எதிராக செயல்பட்டது அக்கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இருப்பினும், அமமுகவுக்கு பொதுவான சின்னம் ஒன்றை பரிசீலித்து வழங்கலாம் என, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதன்படி, தமிழக தேர்தல் ஆணையம் அமமுகவுக்கு ‘ பரிசுப்பெட்டி’ சின்னத்தை வழங்கியது. இது அவ்வமைப்பினருக்கு உற்சாகத்தைத ஏற்படுத்தி இருக்கிறது.
எங்களது வெற்றியை முன்கூட்டியே அறிவித்தது போன்று, சின்னம் கிடைத்துள்ளது என, தேனி மக்களவை அமமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் உள்ளி ட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, இறுதியாக அறிவித்த திட்டம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்கள் அடங்கிய ‘பரிசுப் பெட்டகம்’. இது அதிமுக அரசின் சாதனை பட்டியலில் இடம் பெறுகிறது.
அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சாதனை பட்டியலை அடுக்கும் போது, பரிசுப்பெட்டகமும் இடம் பெற்றது. தற்போது, அதே பெயரில் டிடிவி தினகரன் அமைப்புக்கு ‘பரிசுப் பெட்டி’ என்ற பெயரில் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய போதிலும், தேர்தல் பிரசாரத்தில் சாதனை பட்டியலில் குழந்தைகளுக்கான பரிசுப் பெட்டகம் என்ற பெயரை அதிமுகவினர் சொல்ல தவிர்க்க திட்டமிட்டுள்ளனர்.
அமமுக செய்தி தொடர்பாளர் வெற்றிப் பாண்டியன், வடக்கு 1ம் பகுதிச் செயலர் அசோகன் கூறியது: ஜெயலிலதாவின் கடைசி கால கட்டத்தில் அறிவிக்கப்பட்ட முக்கிய நலத்திட்டங்களில் ஒன்று பரிசுப்பெட்டி.
அவரது சாதனைகளில் ஒன்று எங்களுக்கு சின்னமாக கிடைத்துள்ளது. தாய் மார்கள், பெண்கள் மத்தியில் ஏற்கனவே பரிசுப் பெட்டகம் நன்றாக சென்றடைந்துள்ளது.
குக்கர் சின்னத்தை முடக்க, அதிமுக உச்சநீதிமன்ற வரை சென்று தடுத்தது. இது தமிழக மக்களுக்கு எல்லாம் தெரியும். இருப்பினும், அமமுகவுக்கு என்ன சின்னம் கிடைக்கும் என, எதிர்பார்த்த நிலையில், அம்மாவின் சாதனைகளில் ஒன்று சின்னமாக கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இனிமேல் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அமைச்சர்கள், நிர்வாகிகள் அரசின் சாதனைகளை அடுக்கும்போது, கட்டாயம் பரிசுப் பெட்டகத்தை தவிர்க்க வாய்ப்புள்ளது.
ஆனால் நாங்கள் ஜெயலலிதாவின் பல்வேறு சாதனைகளை குறிப்பிடும்போது, குழந்தைகளுக்கான பரிசுப்பெட்டகத்தை முதன்மைப்படுத்தி பிரச்சாரம் செய்வோம். இது வெற்றியை தேடித்தரும் என, நம்புகிறோம், என்றனர்.