

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையங்களில் இருக்கும் பாரம்பரியமிக்க சிலைகள் பற்றிய விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முறைகேடுகளைத் தடுக்க, இந்தப் பணிகளை ரகசிய கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இதில் மிக பழைமையான கோயில்களில் மரகத லிங்கங்கள், ஐம்பொன் சிலைகள், செப்புத்திருமேனிகள் மற்றும் பழங்கால கற்சிலைகள் அதிகளவில் உள்ளன. பாரம்பரியமிக்க இந்தச் சிலைகளின் தொன்மை மாறாது பாதுகாப்பதற்காக திருவாரூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் 19 சிலை பாதுகாப்பு மையங்களை தமிழக அரசு உருவாக்கியது. இதுதவிர மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களில் புதிதாக 12 சிலை பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 19 சிலை பாதுகாப்பு மையங்களில் உள்ள சிலைகளை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. சிலைகளின் எண்ணிக்கை, அவற்றின் காலம் மற்றும் தன்மைகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள், ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.தனபால் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பழங்கால சிலைகளை பாதுகாக்க அறநிலையத் துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட சிலைகளைப் பற்றி காவல்துறையிடம் புகார் அளித்தோம். அதனடிப்படையில்தான் நடராஜர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் தற்போது மீட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளன.
பக்தர்கள் வேண்டுகோளின்படி, பாதுகாப்பு மையங்களில் உள்ள சிலைகளுக்கு ஒரு கால பூஜைகளும் நடக்கின்றன. இந்த மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மையங் களுக்கு வந்து போகிறவர்களின் விவரங் களை பதிவு செய்யும் குறிப்பேடுகளும் உள்ளன.
புதிதாக கட்டப்பட்டு வரும் 12 சிலை பாதுகாப்பு மையங்கள், ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. ஏற்கெனவே உள்ள பாதுகாப்பு மையங்களில் இருக்கும் சிலைகளின் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.