மருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூ.5 லட்சம்: ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் குறித்து தமிழிசை புது விளக்கம்

மருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூ.5 லட்சம்: ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் குறித்து தமிழிசை புது விளக்கம்
Updated on
1 min read

பிரதமர் கருப்புப்பணத்தை கொண்டுவந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் திட்டம் கொண்டு வரப்படும் அதில் ஒன்றுதான் ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டம் என தமிழிசை புது விளக்கம் கொடுத்துள்ளார்.

கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கருப்புப்பணத்தை கைப்பற்றினால் ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி பேசியதை குறிப்பிட்டு அவர் மக்கள் வாயில் கல்லும், மண்ணையும்தான் போட்டார் என சாடினார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் தமிழிசை கூறியதாவது:

பிரதமர் 15 லட்ச ரூபாய் போடுவதாக சொன்னது தவறான கருத்து. 15 லட்சம் போடுவோம் என்று ஸ்டாலின் கொல்கத்தாவில் சென்று பேசுகிறார். அது தவறான ஒன்று. பிரதமர் அப்படி சொல்லவில்லை.

அவர் என்ன சொன்னார் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் மட்டுமல்ல உள்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தையும் நாங்கள் மீட்டோம் என்றால், நிச்சயமாக ஒரு குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள திட்டமாக வரும். அதில் ஐந்து லட்ச ரூபாய் திட்டம்தான் ஆயுஷ்மான் பாரத் என்கிற மருத்துவ காப்பீடு திட்டமாக வந்துள்ளது.

இன்னும் பத்து லட்சம் மதிப்புள்ள திட்டமல்ல 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை கொடுப்பார் பிரதமர். எல்லா திட்டங்களையும் பாருங்கள் தமிழகத்தில்தான் அதிக திட்டங்கள் வந்துள்ளது. ஆகவே அவர்கள் பேசுவதை பேசட்டும். தமிழகத்தில் பாஜக காலூன்றும், காலூன்றுவது மட்டுமல்ல வேரையும் ஊன்றும் என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் 15 லட்ச ரூபாய் பிரச்சினையில் 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு திட்டமாக வந்துள்ளதாக தமிழிசை புதிய கருத்தை கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in