

மதுரை: திமுக, காங்கிரஸ் கூட்டணி எம். பி.க்கள் அளித்துள்ள நீதிபதி ஜி.ஆர்.சுாவமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரிய தீர்மானத்தை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மக்களவைத் தலைவருக்கு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்கள் 154 பேர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு திமுக உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மேலும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரி திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் மக்களவைத் தலைவருக்கு கடிதம் கொடுத்துள்ளன. திமுக - காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களின் இந்த நடவடிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதிகள் 56 பேர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தைத் தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்த பத்மநாபன், பழனி வேல்ராஜன், கதிர்வேலு, வழக்கறிஞர் சீனிவாசராகவன் உட்பட 154 வழக்கறிஞர்கள் மக்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அதில் கூறியிருப்பதாவது: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, ஆதாரமற்றவை. இதுபோன்ற செயல்பாடு நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதனால், பதவி நீக்கத் தீர்மானத்தின் தகுதிகளை ஆய்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
எம்.பி.க்களில் சிலரின் செயல்பாடு அரசியலமைப்பு அதிகாரங்களை மீறும் வகையிலும், தவறான வகையில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. அரசியலமைப்பு விதிகளை தன்னிச்சையாகப் பயன்படுத்த முயல்வதன் மூலம் இந்திய நீதித்துறையைச் சீர்குலைக்க முயல்கின்றனர். இதன் விளைவாக பதவி நீக்கத் தீர்மானம் அளித்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
1.26 லட்சம் வழக்குகள்: நீதிபதி சுவாமிநாதன் 2017 ஜூன் மாதம் தொடங்கி 2025 நவ. 30 வரை 1.26 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வுகண்டுள்ளார். நீதி வழங்குவதில் பாரபட்சம் இல்லாமல் நேர்மையுடன் செயல்பட்டு வருகிறார்.
அவர் மீது எந்தக் குறையும் சொல்ல முடியாது. நேர்மை, நாணயம் மிகுந்த மற்றும் அறிவார்ந்த நீதிபதிகளில் சுவாமிநாதனும் ஒருவர். அவர் மீது அரசியல், மத அடிப்படையிலான காரணங்களால் சுமத்தப்பட்டுள்ள, ஆதாரமற்ற, தவறான குற்றச்சாட்டுகள் கவலையளிப்பதாக உள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடுகளை, குறிப்பாக நீதித்துறையின் சுதந்திரத்தை மீறும் முயற்சியாகும். மேலும், இது ஜனநாயகத்தின் இரண்டு முக்கியத் தூண்களான நாடாளுமன்றம், நீதித்துறையின் லட்சுமண ரேகையை மீறிய செயலாகும்.
ஜனநாயத்தின் உயர்ந்த கொள்கைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மை மீது நம்பிக்கை இல்லாத சில அரசியல் கட்சிகளின் முயற்சியே இந்தப் பதவி நீக்கத் தீர்மானம். இந்தத் தீர்மானத்தை ஏற்க வேண்டாம். தொடக்க நிலையிலேயே நிராகரித்து சட்டத்தின் மாண்பைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.