

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கிய துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு.
திருவண்ணாமலையில் திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புநிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நேற்று மாலை நடைபெற்றது. இதில் 1.30 லட்சம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி செயலாளரும்,துணை முதல் வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி சிவா, ஆ.ராசா, ப.செல்வராஜ், கனிமொழிகருணாநிதி,மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்றார்.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: எதிரில் உள்ள உங்களை பார்க்கும் போது, 50 ஆண்டுகள் டைம் டிராவல் செய்து பின்னாடி போனது போன்று உள்ளது. உங்கள் மாதிரி இளைஞராக கிராமம்தோறும், தமிழகம் முழுவதும் பயணம் செய்து இளைஞர் அணியை வளர்த்தெடுத்ததை எல்லாம் எண்ணிப் பார்க்கிறேன். அப்படி உழைத்து வளர்த்திட்ட திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
தாழ்ந்த தமிழகமே என்று கவலைப்பட்ட காலத்தை மாற்றி இப்போது திரும்பி பாருங்கள் தமிழ்நாட்டை என்று சொல்லுகின்ற காலத்திற்கு நாம் வந்துள்ளோம்.
அவர்கள் தலைமுறை அடுத்த கட்டத்திற்கு வந்ததும், அவர்கள் உழைப்பு, தியாகம், கொள்கை உணர்வுகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தலைவர் கருணாநிதி சிந்தித்து உருவாக்கியதுதான் இந்த இளைஞர் அணி.
1980 ல் ஜூலை 2ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இளைஞர் அணியை தொடங்கினோம். இப்போது அந்த பணியை உதயநிதியிடமும், உங்களிடமும் ஒப்படைத்துள்ளோம். கழகத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி.
இந்தியாவிலேயே பாஜகவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்ற ஒரே கட்சி திமுக தான். அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது தமிழ்நாடு மட்டும் தான். அதனால் தான் அமித்ஷா போன்றவர்களுக்கு எல்லாம் நம்மீது எரிச்சல். அண்மையில் அமித்ஷா பேசும் போது, பிஹாரில் வெற்றி பெற்றுவிட்டோம். அடுத்த இலக்கு தமிழ்நாடு தான் என்று கூறுகிறார்.
அமித்ஷா அவர்களே, நீங்கள் அல்ல, உங்கள் படையையே கூட்டி வந்தாலும் உங்களால் இங்கு எதுவும் நடக்காது. இது தமிழ்நாடு. என்னுடைய கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே. அன்போடு வந்தால் அரவணைப்போம். ஆணவத்தோடு வந்தால் அடிபணியமாட்டோம் எதிர்த்து நிற்போம். திராடவிட மாடல் அரசின் சாதனைகளை புத்தகமாக அச்சிடும் அளவிற்கு ஏராளமானவற்றை செய்திருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம். இதனை எல்லாம் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் நெருங்கி வந்துவிட்டது, மக்களிடம் கூறுங்கள் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளிய அதிமுகவினர், உத்தமர் போன்று வந்து ஓட்டு கேட்பார்கள். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்ற பாஜகவினர் பொய்பரப்புரை செய்வார்கள். 2026 தேர்தலில் மக்கள் முன் இருக்கக் கூடிய கேள்வி, இன்னும் 50 ஆண்டுகள் முன்னோக்கி நடைபோட போகிறோமா?
இல்லை, பின்னோக்கி இழுக்க முயற்சிப்பவர்களுக்கு அடிபணியபோகிறோமா? அந்த கேள்விக்கு மக்கள் அளிக்கப் போகின்ற விடை தான். திராவிட மாடல் ஆட்சி 2.0. அதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திமுகவின் எதிர்காலத்தில் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. நீங்கள் தான் திமுகவின் 2.0 வின் அடித்தளமாக இருக்க வேண்டும். அந்த வெற்றிக்கான பயணத்தை இன்றே தொடங்குங்கள் என்றார்.