

ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை தெரிவிக்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை மற்றும் தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரின் அ.தி.மு.க. நிர்வாகியான புகழேந்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் என்று சுமார் 913 கோடிக்கு மேல் சொத்து உள்ளது.
இந்த சொத்துக்கள் யாருக்கு என்று ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அதனால், இந்த சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க ஒரு நிர்வாகியை உயர்நீதிமன்றம் நியமிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பின்னர் இந்த வழக்கை தள்ளுபடி செய்து ‘ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் உள்ளதாக தெரிவித்தருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து புகழேந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன்,அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தீபக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டை அடமானமாக வைத்து கடன் வாங்கியதில் ஒன்னறை கோடி ரூபாய் செலுத்த நோட்டீஸ் வந்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் அப்படியானால் ஜெயலிதாவுக்கு எத்தனை சொத்துக்கள், கடன் எவ்வளவு உள்ளது என கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து வருமான வரித்துறை தான் சொல்ல முடியும் என்று தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து இந்த வழக்கில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை பிரதிவாதியாக சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் வேதா இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கு இன்று கருத்து கேட்பு கூட்டம் நடந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதன் மதிப்பு என்னவாக இருக்கும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 100 கோடி ரூபாய் வரைக்கும் இருக்கும் என்று தெரிவித்தனர் இதையடுத்து இந்த வழக்கில் தமிழ் வளர்ச்சித் துறையையும் சேர்த்த நீதிபதிகள் அமர்வு வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.